13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் – வட, கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்திய பிரதமருக்கு கடிதம்

Sri Lanka: Tamil society wants Modi to tell Ranil to hold provincial polls

வடக்கு, கிழக்கு மகாணத்திலுள்ள சிவில் அமைப்பினர் 13வது திருத்தச் சட்டத்தினை  நடைமுறைப்படுத்த  கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தை யாழ் இந்திய துணை  உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று திங்கட்கிழமை (17) கையளித்தனர்.

கடிதத்தை கையளித்த பின் ஊடகங்களுக்கு வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை கருத்து தெரிவிக்கையில்,

13வது திருத்த சட்டம் குறித்து அதனால், வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல் படுத்துமாறு சிவில் சமூக பிரதிகளாக யாழ் இந்தியன் துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.

அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முடிந்த வரையில்  13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு  கோரி இந்த கடிதத்தினை அனுப்பி இருக்கின்றோம்.

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக இணைந்த வடகிழக்கில் அமைந்த மாகாணசபையில்  ஒன்றரை வருடங்கள் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றினர்.

பிரிந்த வடக்கு மாகாணமும், ஐந்து வருடம் மாத்திரம் செயற்பாட்டில் இருந்தது. அந்த காலத்திலும் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை. அதிகாரங்களில் சில தடைகள் இருந்தாலும் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்ற கவலை நமக்கு உள்ளது என்றார்.