12ஆவது நாளாக யாழில் தொடரும் உணவுதவிர்ப்பு போராட்டம்

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம், இன்று   12ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

சிறீலங்காவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இடம்பெற வேண்டும் எனவும் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியும் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுழற்சி முறையிலான தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்,  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், உள்ளிட்ட பலரும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.