11 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் கைது

வங்காள விரிகுடாவில் கண்காணிப்புப் பணிகளின் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (Indian Exclusive Economic Zone), மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 இலங்கை மீனவர்களை நேற்று(12) கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, இரண்டு மீன்பிடி படகுகளையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக காக்கிநாடா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து சுமார் 175 கடல் மைல் தொலைவில் இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இலங்கை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடசார் வலயங்கள் இந்திய சட்டம் 1981 இன் படி, இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்தில் வெளிநாட்டு படகுகள் மீன்பிடிப்பது குற்றமாகும். காக்கிநாடாவில் உள்ள கடல்சார்சூழல் காவல் துறையினர், மீன்வளத் துறை, சுங்கம் மற்றும் உளவுப் பணியகத்தினர் இணைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.