மனித உரிமை மீறல்கள் குறித்து சகல தரப்பினரையும் விசாரிக்க இலங்கைக்கு ஐ.நா.சபையின் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழு பரிந்துரை

வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு, அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

‘உள்நாட்டிலும், பூகோள ரீதியிலும் மிகமோசமான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும்கூட, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இலங்கை முன்னேற்றமடைந்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தமும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தையும், நிதியியல் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தியதுடன் தேர்தல் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தியது.

ஊழல் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய வங்கிச் சட்டமூலமானது அவ்வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தின் நிலைபேறானதன்மையினை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கின்றது’ என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேவேளை இம்மீளாய்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் 106 பேர் உரையாற்றியதுடன் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், மாலைதீவு, நேபாளம், ரஷ்யா உள்ளடங்கலாக 101 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீதான திருத்தங்கள், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரிக்கும் செயன்முறையை நோக்கிய இடைக்கால நடவடிக்கையாக அமைந்தது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் சட்டத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

மேலும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட பிரிவொன்று ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவானது வடமாகாண அபிவிருத்தி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழு ஆகியவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

அடுத்ததாக காணாமல்போனோர் குறித்த பெரும்பாலான முறைப்பாடுகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், அவைகுறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றது.

அத்தோடு இழப்பீட்டுக்கான அலுவலகமானது இதுவரையில் 4610 சம்பவங்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தமாக 277.9 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்கியிருக்கின்றது. அச்சம்பவங்களில் பெரும்பான்மையானவை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பதிவானவையாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 294 பரிந்துரைகளையும் இம்மீளாய்வுக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அவை ஏனைய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பாகும்.

அவற்றில் முக்கிய பரிந்துரைகள் வருமாறு: 

சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற ஏனைய நடத்தைகள் மற்றும் தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் தெரிவுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பொருத்தனைகளின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், மரணதண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் இரண்டாவது தேர்வுக்குரிய செயன்முறையை அங்கீகரித்தல், சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தல், பொருளாதார மற்றும் நிதியியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதுடன் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான வளங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்தல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடியவாறு விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையிலான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், உலகளாவிய காலாந்தர மீளாய்வின் பின்னரான பரிந்துரைகளின் அமுலாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான உள்ளகப்பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சுக்களைத் தடுத்தல், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டித்தல், இன, மத, சாதி, பால் மற்றும் வேறு எந்தவொரு அடிப்படைகளிலுமான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், அனைத்து வடிவங்களிலுமான சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிசெய்தல், அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுத்தல், அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகிய பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.