வேலை தேடுபவர்களுக்கு காஷ்மீர் காவல்துறை புதிய கட்டுப்பாடு

புதிதாக வேலைக்குச் சேர தங்கள் சமூக ஊடகங்களை காவல்துறையின் சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டுமென ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பொதுத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசின் நிர்வாகச் செயலர்கள், மண்டல ஆணையர்கள், இதர துறையின் தலைமைகள் தங்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளை ஜம்மு காஷ்மீர் புலனாய்வுத் துறையின் சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்காத பணியாளர்களின் அடிப்படை தகவலைக் கேட்டிருந்ததாகவும் அந்த செய்திகளில் கூறப்படுகின்றது.

அத்தோடு தற்போது புதிதாக பணியில் சேருபவர்கள் மற்றும் முன்னரே பணியில் சேர்ந்து இருப்பவர்களாக இருந்தாலும் சமூக ஊடக கணக்குகளை காவல்துறையிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறாத வரை சம்பளத்தை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு,  ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை (370ஐ) நீக்கிய பின் அங்கு சமூக ஊடக தளங்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.