வெந்நீரூற்று வழக்கில் மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிப்பு.!

திருகோணமலை-கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இடைபுகு மனுதாரரின் விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீரூற்று வழக்கு இடைபுகு மனுதாரரை வழக்கில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது பற்றியே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் முதலாம், இரண்டாம் மனுதாரர் சார்பில் அரச சட்டத்தரணி மற்றும் இடைபுகு மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ஏ. எஸ். எம். ரபீஸ் உட்பட சிரேனிய புஞ்சிநிலமே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச தேரரினால் முன் வைக்கப்பட்ட ஆவணங்களில் குறித்த கன்னியா வெந்நீரூற்று தொடர்பிலான எந்த ஒரு உரிமைக்கான ஆவணங்களையும் முன்வைக்காத காரணத்தினால், முதலாவது எதிர் மனுதாரரான தொல்பொருள் திணைக்களம் மற்றும் இரண்டாவது மனுதாரரான திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திற்கு உரிமை இருப்பதாகவோ அல்லது வில்கம் விகாரை விகாராதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது பற்றியோ எந்தவிதமான ஆவணங்களையும் முன்வைக்கவில்லை.

எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மனுதாரரை குறித்த வழக்கில் ஒரு கட்சி காரராக ஏற்றுக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு அழைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.