வெடுக்குநாறி மலையில் தமிழரின் உரிமைப்பொங்கல்!

தமிழரின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், இன்று பல்லாயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் தமிழர்களின் உரிமைப் பொங்கல் உற்சவம் நடைபெற்றது.

1 27 வெடுக்குநாறி மலையில் தமிழரின் உரிமைப்பொங்கல்!

வவுனியா வடக்கு வெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தில் வருடாவருடம் பொங்கல் உற்சவம் நடைபெறுவது வழமை, ஆனால் தமிழரின் பாரம்பரிய வணக்கஸ்தலமாகிய குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதில் சமீப காலமாக அரசு தொல்லியல் திணைக்களத்தினூடாக தொடர் தடைகளை ஏற்படுத்தி வந்தது.

இருப்பினும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்றும் நோக்கில் தொடர்சியான போராட்டங்கள் மற்றும் முயற்சியின் பலனாக இம்முறை குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள நீதிமன்றால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல தடைகள் தொடர்ந்தவண்ணம் உள்ள நிலையிலும் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி, இன்று 108 பானைகளில் பொங்கலுடனான இறுதி உற்சவம் நடைபெற்றுள்ளது.

2 3 வெடுக்குநாறி மலையில் தமிழரின் உரிமைப்பொங்கல்!

இது தமிழர்களின் உரிமைப்பொங்கலாக இம்முறை முன்னெடுக்கப்பட்டது. இந்த பொங்கல் உற்சவத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றியிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக உரிமைப்பொங்கலை முன்னெடுத்தனர்.