வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் – இரு அரச உத்தியோகத்தர்கள் கைது

குடும்பத் தலைவன் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பண்ணாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேற்படி மூன்று பெண்களும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் தாய் ஆசிரியர் எனவும் பிள்ளைகள் இருவரும் மாணவிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. எல்லை மதில் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதிக்குள் மதில் கட்டி முடிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டமைக்கு இணங்க இரு தரப்பினரின் நிதியில் மதில் அமைக்கப்பட்டது எனவும் இதன்போது ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து எல்லைக் காணிக்கு சொந்தமானவரின் இரு மகன்மாரும் வெள்ளிக்கிழமை இரவு குறித்த வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் செய்த முறைப்பாட்டை அடுத்து தாக்கிய இரு அரச உத்தியோகத்தர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.