விசாவை இடைநிறுத்தியது இந்தியா; இன்று முதல் பயணம் செய்ய முடியாது

இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விசாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வருகின்றது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இராஜதந்திர, உத்தியோகபூர்வ, ஐ.நா/சர்வதேச அமைப்புக்கள், வேலைவாய்ப்பு, நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றுக்கான விசாக்கள் தவிர்ந்த ஏனைய சகல செல்லுபடியாகும் விசாக்களும் 2020 ஏப்ரல் 15 ஆம் திகதிவரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் இந்த நடைமுறை அமுலாகும்.

இந்தியாவில் இருக்கும் சகல வெளிநாட்டவர்களதும் விசாக்கள் தொடர்ந்து செல்லுபடியாகும். அவர்கள் தமது விசாக்களை மாற்றுவதற்கு அல்லது நீடிப்பதற்கு விரும்பினால் அல்லது வேறு கொன்சியுலர் சேவைகளை பெற விரும்பினால் e-FRRO ஊடாக அருகிலுள்ள FRRO/FRO அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

OCIஅட்டைகளை வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணிக்கும் அனுமதி 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலும் புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் அமுலாகும்.

அத்தியாவசியமான தேவைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் அருகில் இருக்கும் இந்திய தூதரகத்தை அணுக முடியும்.

2020 பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ், கொரிய குடியரசு, ஈரான், இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணித்தவர்கள் அல்லது அந்நாடுகளிலிருந்து வருகைதரும் இந்தியர்கள் உள்ளிட்ட சகல பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த அறிவித்தல் புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் அமுலாகும்.

இந்தியாவுக்கு வருகைதரும் இந்தியர்கள் உள்ளிட்ட சகலரும் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் அவர்கள் வருகைதரும் நிலையில் ஆகக் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

சகல இந்தியர்களும் வெளிநாடுகளுக்கு தேவையற்ற பயணத்தை மேற்கொள்வதை தவிர்க்குமாறு மிகவும் ஆணித்தரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் நாடு திரும்பும் நிலையில் ஆகக் குறைந்தது 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள். அதிசிறந்த பரிசோதனை மற்றும் கண்காணிப்பு சோதனை முறைகள் தரை மார்க்கமான சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இந்த விடயம் தொடர்பாக உள்துறை அமைச்சினால் பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.

இலங்கையில் இதுவரை கொவிட் 19 தாக்கம் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக பாதிக்கப்பட்டவர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். இரண்டாவது நோயாளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

2020 மார்ச் 10ஆம் திகதி முதல் தென் கொரியா, இத்தாலி அல்லது ஈரான் ஊடாக அல்லது அந்த நாடுகளிலிருந்து வருகை தரும் சகல பயணிகளுக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது..

இந்த நாடுகளூடான பயணத்தினை கடந்த 14 நாட்களுக்குள் மேற்கொண்ட பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்.

பயணிகள் கப்பலின் பயணிகள் மற்றும் மாலுமிகள் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். (2020 மார்ச் 3ஆம் திகதி முதல்)

சுற்றுலா பயணிகளுக்கான வருகைதரு விசா நடைமுறை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது∙ இலங்கைக்கு வருகைதரும் சகல நாட்டவர்களும் வெப்பநிலை பரிசோதனைக்கு முகம் கொடுக்கவேண்டிய அதேநேரம் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும்.