விசாரணைகள் முடியும் வரை அசாத் சாலி இராஜனாமா செய்ய வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது எரிகின்ற நெருப்பை அணைக்கும் கருத்துகளையே முஸ்லிம் தலைவர்கள் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்தது.

நாட்டில் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களையும், சந்தேகங்களையும் அடிப்படையாக கொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும். மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி போன்றோர் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றாது எரிகின்ற நெருப்பை அணைக்கும் கருத்துகளையே இத்தருணத்தில் வெளியிட வேண்டும்.

அசாத் சாலி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானித்து வருகின்றார். அவருடைய கருத்துகள் சமூகத்தில் சகவாழ்வுக்கு பதிலாக மாறுபட்ட நிலைமைகளை தோற்றுவிக்கும் எனவும் அக்கட்சி தெரிவித்தது.

கொழும்பு,டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்புத் துறையினர் நாய்களை கொண்டுசெல்லக் கூடாதென மேல்மாகாண ஆளுநர்

அசாத் சாலி தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

பாதுபாப்புத்துறையினர் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தேடுதல் வேட்டைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவரும் தலையீடு செய்யக் கூடாது. முஸ்லிம் தலைவர்கள் இத்தருணத்தில் பொறுப்புணர்வுடன் கருத்துகளை வெளியிட வேண்டும்.

மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு கருத்துத் தெரிவிக்கும் உரிமையுள்ளது.

ஆனால், சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு எவராக இருந்தாலும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

அசாத் சாலி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். அவருக்கு உரிய ஆலோசனையும் ஜனாதிபதி வழங்கியிருக்க கூடும். இவ்வாறான கருத்துகளால் சகவாழ்வுக்கு பதிலாக இனங்களுக்கு இடையில் விரிசலே மேலும் அதிகரிக்கும்.

பாதுகாப்புத்துறையினருக்கு தடையின்றி அவர்களது விசாரணைகளையும்,தேடுதல் வேட்டையையும் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இதேவேளை, ஓர் அமைச்சருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவர் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது எதுவாக இருக்க வேண்டுமென எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

பாரிய குற்றச்சாட்டுகள் ஓர் அமைச்சருக்கு எதிராக சுமத்தப்படும் பட்சத்தில் அவர் தமது பதவியை இராஜனாமா செய்வதே பொருத்தமானதாக இருக்கும். அவ்வாறுதான் கடந்தகாலத்தில் நடைபெற்றுள்ளன.

விசாரணைகள் முடியும் வரை அவர் இராஜனாமா செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஐ.தே.முன்னணிதான் இவர் தொடர்பிலான அடுத்தகட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றார்.