‘விக்கி’க்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; கடவுச் சீட்டை பறிமுதல் செய்யுமாறும் கோரிக்கை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சமூகங்களிடையே இன அல்லது மதவெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டார் என தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வரன் கூறினார் என அந்த முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற நீதியரசரான விக்னேஸ்வரன் இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்றும், வடக்கு மாகாணத்தில் புத்தர் சிலைகள் தன்னிச்சையாக நிறுவப்படுவதாகக் கூறி அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறும், கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.