வாக்குப் பதிவு, எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் இல்லை – அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு

“அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையில் எந்தக் குளறுபடிகளும் நடக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை. அதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புகார்களில் உண்மை இல்லை” என்று அமெரிக்க தேர்தல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டரம்ப், மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார். இதில் வெற்றிக்கு தேவை 270 எலக்டோரல் வாக்குகள் என்ற நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று, புதிய அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் 217 எலக்டோரல் வாக்குகள் பெற்று. தோல்வியடைந்த ட்ரம்ப் தனது அதிபர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்து வருகின்றார். “வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். மிகப் பெரும் மோசடியால் எனது வெற்றியை பறித்துக் கொண்டு விட்டனர்.” என பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர்  கருத்துக் கூறுகையில், வாக்குப் பதிவுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் மிகவும் முறையாகவும், பாதுகாப்புடனும் நடந்தன. வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை. மாற்றப்படவும் இல்லை. எனவே ட்ரம்ப்பின் புகாரில் எந்தவித உண்மையும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழும் என்று எங்களுக்குத் தெரியும். அவற்றை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

அனைத்து மாகாணங்களிலும் பதிவான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அனைத்து வாக்குச்சீட்டுகளும் அப்படியே பதுகாப்பாக உள்ளன. தேவைப்பட்டால் எந்த மாகாணத்திலும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியும்” என்று கூறினார்.