வடமாகாண ஆளுநராக கோத்தபாயாவின் விசுவாசியான முரளிதரன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் வடக்கு மாகாண ஆளுநராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும் சிறீலங்கா  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா ஜனாதிபதி இந்திய விஜயத்தை மேற்கொள்ள முன்னர் இந்த ஆளுனர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது.

முன்னதாக வடக்கு ஆளுநராக நியமனம் என்ற செய்திகளை முரளிதரன் மறுத்திருந்தார். அதேபோல அப்படியான எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு முரளியை அழைத்துப் பேசிய சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய, வடக்கு ஆளுநர் பதவியை ஏற்குமாறு கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அந்தப் பதவியை முரளி ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த நியமனங்கள் இறுதி செய்யப்பட்டன.

கடந்த அரச தலைவர் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்காவின் ஆதரவாளரான சுரேன் ராகவன் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்காவுடன் இணைந்து ஐ.தே.காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.