வடக்கு ஆளுநர் தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

இந்தியாவிற்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் நேற்று இந்தியா சென்றிருந்தார்.

நேற்றைய தினம் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு முதன்முறையாக பயணிகள் விமான சேவை ஆரம்பித்த வைக்கப்பட்ட போது, முதல் விமானத்தில் வடக்கு ஆளுநர் இந்தியா சென்றார்.

இந்த விஜயத்தின் போது, தமிழக திமுக தலைவரும், சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று(12) முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

41 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டதுடன், இந்தியாவிற்கான பயணிகள் விமான சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதை ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்தார்.  இதன் மூலம் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் நாட்டிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் பொறுப்பு தன்னிடம் உள்ளதாகவும்  இதற்காகவே ஸ்டாலினை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது இருவரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.