வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகளை புறம்தள்ளும் ரணில்-இந்திய அரசுகள்

யாழ் விமான நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை சிவில் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 17 திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த பலாலி விமான நிலையம் 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் இருந்து பலாலிக்கு விமான சேவைகள் நடைபெற்றன. இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரை அடுத்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததாகக் கூறப்படுகின்றது. வடமாகாண வளர்ச்சிப் பணிக்காக இந்தியா சுமார் 300 கோடி நிதியுதவி அளித்தது. அதை வைத்து பலாலி விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த விமான நிலையம் பற்றி சுரேன் ராகவன் குறிப்பிடும் போது,

இந்த அபிவிருத்தித் திட்டமானது, போருக்குப் பின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும். புலம் பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ். மண்ணிற்கு வந்து தமது உறவுகளைச் சந்திப்பதற்கு இலகுவாக இந்த விமான நிலையம் அமைந்துள்ளது என இராகவன் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் தமிழ் நாட்டிற்கான சேவைகளை ஆரமபிக்கும் இந்த விமான போக்குவரத்து, வாரத்திற்கு 12 சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தன்னால் நியமிக்கப்படும் ஆளுநரை முன்நிறுத்திவரும் சிறீலங்கா அரசு தமிழ் அரசியல் கட்சிகளை மறைமுகமாக புறம்தள்ளி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. சிறீலங்கா அரசின் மனநிலையை ஒத்ததாகவே இந்திய அரசின் நடவடிக்கைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தான் இந்திய அரசினால் நிர்மானிக்கப்படும் பலாலி விமான நிலையத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் நேரிடையாக அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.