கடற்படையால் கடத்தப்பட்ட ரஜீவ் நாகநந்தன் தாய்க்கு இறுதியாக கூறிய தகவல்

கடந்த 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பில் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட ரஜீவ் நாகநந்தன் உட்பட நான்கு பேர் தொடர்பாக ரஜீவ் அவர்களின் தாயார் சிஐடியினரிடம் வாக்குமூலம் அளித்தார்.

பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக செல்லவிருந்ததை கொண்டாடும் முகமாக சென்று கொண்டிருந்த வேளை கொழும்பில் வைத்து கடற்படையினரால் இந்த நால்வரும் கடத்தப்பட்டனர்.

பின்னர் 2009 மே 21ஆம் திகதி ரஜீவ் அவர்கள்  அவரது தாயாரான சரோஜினியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர்கள் 18 முதல் 20 வயதுடைய இளைஞர், யுவதிகளை இங்கே கொண்டு வந்து சுட்டுக் கொலை செய்கின்றார்கள் எனக் கூறினார். இதுவே அவரின் இறுதி தொலைபேசி அழைப்பாக அமைந்ததாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.

இந்த தொலைபேசி அழைப்புக் குறித்து சிஐடியினர் சரோஜினியிடம் மீண்டும் ஓர் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர்.

ரஜீவும் அவரது நண்பர்களும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசியை பெற்று தனது தாயாருடன் உரையாடியுள்ளார்.

மகனின் உரையாடல்களை சரோஜினி நாட்குறிப்பொன்றில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். அதில் முகாமில் பயங்கரமான சம்பவங்கள் நிகழ்வதாகவும், இதனால் ரஜீவ் மிகுந்த அச்சத்தில் இருந்ததாகவும் சரேஜினி சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

எனது மகன் கழிவறைக்குச் சென்ற வேளை இரத்தக் கறைகளையும் பெருமளவு இரத்தங்களையும் கண்டுள்ளான். தனக்கும் அந்தக் கதி ஏற்பட்டு விடுமோ என அச்சம் கொண்டிருந்தான் என அவர் சிஐடியினரிடம் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு நீதவானிற்கு சமர்ப்பித்த பி அறிக்கையில் சிஐடியினர் 2009 மே 21ஆம் திகதிக்கு பின்னர் ரஜீவ் நாகநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான சுமித் ரணசிங்கவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட திருகோணமலை கன்சைட் முகாமில் 18 முதல் 20 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என சிஐடியினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஒரு தசாப்தத்திற்கு மேல் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோர்களுக்கு சிஐடியினரின் இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்களும் கடத்தப்பட்டு 8 மாதங்களின் பின்னர் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற முடிவிற்கு தனது விசாரணையாளர்கள் வருவதாக இந்த விசாரணைகளுக்குப் பொறுப்பாக உள்ள சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ரஜீவிற்கும் அவரது தாயாருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு தாங்கள் வந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்தனர்.

கொலைகாரர்கள் மேற்கொள்ளும் கொலைக்கு தானும் பலியாகக்கூடும் என ரஜீவ் அச்சம் கொண்டிருந்தார் என்றும் 2009 மே 21இற்குப் பின்னர் ரஜீவ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாங்கள் கருதுவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கிரிசான் வெலகெதர என்பவரும், கடற்படை உத்தியோகத்தர் செனிவரட்ண என்பவரும் கடத்தப்பட்ட 11 பேரும் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளனர் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டதையும், அவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் சீற்றினால் போர்த்தப்பட்டு ட்ரக்கில் ஏற்றப்பட்டதை தான் கண்டதாகவும் வெலகெதர ஏற்றுக் கொண்டார்

இந்த ஆதாரங்களை வைத்தே தாம் அவர்கள் கொல்லப்பட்டனர் என்ற முடிவிற்கு வந்ததாக நிசாந்த சில்வா தெரிவித்தார்.

ரஜீவ் தனது தாய்க்குத் தெரிவித்த விடயங்கள் உண்மை எனவும், இதை தாங்கள் உறுதி செய்வதாகவும், இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த சிஐடியினர், கடற்படையினர் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோதமாக கடத்தி உடல், உள சித்திரவதைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை படுகொலை செய்தனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் சிஐடியினரின் இந்த தகவல்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை.

காணாமல் போன டிலான் ஜமால்தீனின் தாய் ஜெனிபர் வீரசிங்க சிஐடியினர் தெரிவிப்பதை தான் ஏற்க தயாராக இல்லை எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனது மகன் இறந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே தான் நம்புவேன் என்றும், எஞ்சிய உடற் பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையை தான் நம்புவதற்குத் தயாராக உள்ளேன் எனவும் கூறினார்.

நான் ஜோதிடத்தை நம்புகின்றேன். அவை எனது மகன் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கின்றன. அவர்கள் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜெனிபர் வீரசிங்க தெரிவித்தார்.