வடக்கில் சீன பிரஜை விவகாரம் – சுமந்திரனின் பதிவுக்கு சீன துாதரகம் பதில்

வடக்கில் சீனப் பிரஜைகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பின்னர் அது குறித்து தெளிவு படுத்தும் வகையிலான மற்றொரு பதிவில் சீன பிரஜை தொடர்பான தகவல் மற்றும் படம் பதிவேற்றியமைக்காக வருந்துகின்றேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீன துாதரகம் இது குறித்து தனது பதிவில், சீனக் கம்பணிகள், பெருமளவிற்கு உள்நாட்டு ஊழியர்களையே பணியமர்த்துகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

WhatsApp Image 2021 06 29 at 2.10.56 PM வடக்கில் சீன பிரஜை விவகாரம் – சுமந்திரனின் பதிவுக்கு சீன துாதரகம் பதில்

முன்னதாக தனது ட்விட்டர் பதிவில், யாழ்ப்பாணத்தில் சீனப்பிரஜைகள் பணியமர்த்தப்படுவது குறித்தும் பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்புப் பணியில் சீனப் பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்றும் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில், அவர்களுக்கு ஏன் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார் சுமந்திரன்.

எனினும், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் சீனப் பிரஜை அல்லர் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், “அவர் இலங்கையர். இஸ்லாமிய சகோதரர். அவருடைய பெயர் மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹனிஃபா. அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவர் குடத்தனையில் திருமணம் செய்து, அம்பனில் குடியேறியுள்ளார். வீதித் திட்ட ஒப்பந்தக்காரரான என். எம் நிர்மாண பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்” என்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன், “இந்த நபர் சீன நாட்டவர் அல்லர். இலங்கையர் என்பது எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகின்றேன். எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் பிற உண்மையான சீனர்களின் படங்கள் இடுகையிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.