பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு HRW வலியுறுத்து!

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என இலங்கை அரசை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இன்று வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 கைதிகளுக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றபோதும், கடுமையான இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனது உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றாவிட்டால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்யவுள்ளதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வெசாக் பூரணை தினமாக ஜூன் -24 ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் உட்பட 94 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. சித்திரவதை மூலம் பலவந்தமாகக் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் இவர்கள் பலர் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன், சக அரசியல்வாதியைக் சுட்டுப் படுகொலை செய்த குற்றத்துக்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளியான துமிந்த சில்வாவுக்கும் இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தமையானது இலங்கையின் சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன், பொதுமன்னிப்பளிக்கும் அதிகாரம் தனிப்பட்ட விறுப்பு-வெறுப்புக்களின்பால் பயன்படுத்தப்படுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறினார்.

2019 -இல் பதவியேற்றதிலிருந்து ராஜபக்ச அரசு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டைத் தூண்டுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதை இன்னும் மோசமானதாக்குவதற்கான நடவடிக்கைகளை கோட்டாபய ராஜபக்ச எடுத்துவருகிறார்.

மார்ச் மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இது இன, மத மற்றும் வகுப்புவாத ரீதியாக செயற்பட்டு தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டப்படும் எவரையும் இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க வழி செய்கிறது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை கொழும்பில் ஒரு மோசமான சித்திரவதை தளத்தில் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என இப்பகுதி வழக்கறிஞா் ஒருவர் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கில் ராஜபக்ச அரச நிர்வாகத்தின் கீழுள்ள பாதுகாப்புப் படைகளால் ஏராளமான சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என சா்வதேசத்தில் இருந்தும் உள்நாட்டில் இருந்து தொடா்ச்சியான அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் மோசமான துஷ்பிரயோகங்களை ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை நீக்காவிட்டால் ஜி.எஸ்.பி + சலுகையை இரத்துச் செய்யும் தனது அறிவிப்புக்கு குறித்த ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.