வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பினார் மகிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்த மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பிக் கொடுத்து விட்டாரென சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

“13ஆவது அரசியல் திருத்தம் ஏற்கவே நடைமுறையில் உள்ளது. இதில் உண்மை என்னவென்றால், அந்தச் சட்டத்தை மாகாணசபை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாகக் கூறினால், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யாமல் திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதேவேளை எனது இந்த டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த நவம்பர் மாதத்தில் சிறீலங்கா ஜனாதிபதியான கோத்தபாயா ராஜபக்ஸ சந்திப்பின் போது 2 நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவிற்காக போடப்பட்ட அத்திவாரம். இதனூடாக மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் பிரதமர் மோடியுடனான சந்திப்பு, மிகவும் பயன் மிக்க சந்திப்பாக அமைந்தது. இரு நாடுகளுக்குமிடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டு விட்டன. நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடுகளும் நல்ல பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.