வங்கதேசம்: ஆபத்தான தீவுக்கு தொடர்ந்து இடமாற்றப்படும் ரோஹிங்கியா அகதிகள்

மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை தொடர்ந்து இடமாற்றும் நடவடிக்கையில் வங்கதேச அரசு ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே சுமார் 5000 அகதிகள் அத்தீவுக்கு இடமாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 2000 அகதிகள் காக்ஸ் பஜார் முகாம்களிலிருந்து இடமாற்றப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் அத்தீவுக்கு இடமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது.