ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு மரண தண்டனை – பாகிஸ்தான் இராணுவத் தலமைத் தளபதி

பாகிஸ்தானில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மருத்துவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியமான தகவல்களை கசிய விட்டதாக, ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை உறுதி செய்துள்ள பாகிஸ்தானின் இராணுவத் தலைவரான காமர் ஜாவிட் பஜ்வா, ஓய்வு பெற்ற பிரிகேடியர் ராஜா ரிஸ்வான் மற்றும் ஒரு “விழிப்புணர்வு அமைப்பில்” பணியாற்றிய டாக்டர் வாசிம் அக்ரம் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மற்றொரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜாவேத் இக்பால் ஒரு காலவரையற்ற சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதாவது அவர் பாகிஸ்தானிய சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் சிறையில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானிய ராணுவம் முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று நபர்களால் கசியவிடப்பட்ட தகவல்களையோ அல்லது யாரிடம் தகவல்களை வெளிப்படுத்தினார்கள் என்பது பற்றிய விவரங்களை இராணுவம் வழங்கவில்லை. இரண்டு இராணுவ அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கு தொடரப்படுவதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்களா என்பது குறித்து தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரை தனக்கென்று சொந்த சட்டத்தினையும், நீதிமன்றத்தினையும் கொண்டுள்ளது. தவறான குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் இராணுவ அதிகாரிகளை எப்பொழுதும் மறைமுகமாக வைத்தே விசாரணை மேற்கொள்வது வழக்கம்.