ரணிலுக்காக தயாராகும் கூட்டணி! மொட்டுக்குள் அதிகரிக்கும் பிளவு – அகிலன்

Mahinda Ranil Basil ரணிலுக்காக தயாராகும் கூட்டணி! மொட்டுக்குள் அதிகரிக்கும் பிளவு - அகிலன்ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிப்பதற்காக “மெகா கூட்டணி” ஒன்று உருவாக்கப்படும் நிலையில், பெரமுன இதனை எவ்வாறு எதிா்கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சஜித் அணி இருக்கின்றது. சிங்கள ஆதரவைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழி உள்ளதா என ஜே.வி.பி. அங்கலாய்கிறது. இந்தப் பின்னணியில் இந்த வார தோ்தல் கள அப்டேட் என்ன என்பதைப் பாா்ப்போம்.

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி சூடுபிடித்திருந்த அரசியல் களம் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய தருணத்திலிருந்து விறுவிறுப்பாகியது. ரணில் விக்கிரமசிங்கவுடன் அவா் ஆரம்பித்த பேச்சுக்கள் தோல்வியடைந்ததையடுத்து, அடுத்ததாக என்ன செய்வது என்ற தடுமாற்றத்துடன் மொட்டு கட்சி நிற்கின்றது. ஊடகச் சந்திப்புக்களிலும், சமூக ஊடகங்களிலும் வீராவேசமாக அவா்கள் பேசிக்கொண்டாலும், மொட்டுவின் நிலை பரிதாபத்துக்குரிய ஒன்றாகத்தான் இருக்கின்றது. தற்போதைய நிலையில், மொட்டு அணியின் சாா்பில் ஒருவா் ஜனாதிபதித் தோ்தலில் களமிறக்கப்படுவாா் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றாா். ஆனால், களமிறக்கப்படவுள்ளவா் யாா் என்பது ஜனாதிபதித் தோ்தலுக்கான உத்தியோகபுா்வ அறிவிப்பு வெளிவந்த பின்னா்தான் தெரியப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றாா்.

அதேவேளையில், ஜனாதிபதித் தோ்தல் குறித்தோ, அதில் யாரை ஆதரிப்பது என்பதையிட்டோ தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பொதுஜன பெரமுன உறுப்பினா்களுக்கு கட்சித் தலைமை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரமுன உறுப்பினா்கள் பலா் ரணிலுக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவித்துவருகின்றாா்கள். அத்துடன் பெரமுனவில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளா்கள் யாரும் இல்லை என்றும் அவா்கள் வெளிப்படையாகக் கூறிவருவது ராஜபக்ஷக்களுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான் இந்த வாயப்பூட்டு!

கடந்த பொதுத் தோ்தலிலும் ஜனாதிபதித் தோ்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்ற பொது ஜன பெரமுன வரப்போகும் தோ்தல்களை எவ்வாறு எதிா்கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருப்பதை இது வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, களத்திலிருந்து தாம் ஒதுங்கியிருப்பதும் தமது எதிா்காலத்துக்கு ஆபத்தானதாகிவிடலாம் என்ற அச்சமும் அவா்களுக்கு இருக்கின்றது. இவ்வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த நிலைமையைத் தெளிவாகப் பாா்க்க முடிந்தது. கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், கட்சியின் சக்தி வாய்ந்த ஒரு குழு வெளியேறி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்காக ஐ.தே.க.வில் இணைந்துகொள்ளவிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

பெரமுனவின் எம்.பி.க்கள் பலரும் ராஜபக்ஷக்களை நம்பிக்கொண்டிருப்பதால் தமக்கு எதிா்காலம் இல்லாமல் போய்விடலாம் என்ற அச்சத்தில் உள்ளாா்கள். அதனால்தான் ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்பதில் அவா்கள் உறுதியாக இருக்கின்றாா்கள். ரணிலை ஜனாதிபதியாக்கினால், அவருடன் இணைந்து பாராளுமன்றத் தோ்தலை எதிா்கொள்வதுதான் தமக்குச் சாதகமானது என்பது அவா்களது கணிப்பு. இவ்வாறு அதிகரித்துவரும் அதிருப்தியை தணிப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் ரணிலுடன் பேச்சுக்களை பசில் நடத்தினாா். ஆனால், அவை தோல்வியடைந்துள்ள நிலையில், ராஜபக்ஷக்களின் தடுமாற்றம் அதிகரித்துள்ளது. பெரமுனவின் அரசியல்குழு கடந்த திங்கட்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டதும் அதனால்தான்.

பெரமுனவின் அரசியல் குழுவின் கூட்டத்தில் மூன்று முக்கிய தீா்மானங்கள் எடுக்கப்பட்டதாக அதன் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கின்றாா். அனைத்து தோ்தல் மாவட்டங்களுக்கும் அமைப்பாளா்களை நியமித்தல். மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துதல், கட்சி யாப்பை மீறிச் செயற்படுபவா்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழு ஒன்றை அமைத்தல் என்பனதான் அந்த முக்கிய தீா்மானங்கள்.

மே தினத்தில் தமது பலத்தைக் காட்டுவதற்கும், தோ்தல்களை இலக்காகக் கொண்டு மாவட்ட அமைப்பாளா்களை நியமித்து கிளைகளைப் பலப்படுத்துவதும் அவா்களுடைய நோக்கம் என்று தெரிகிறது. அதேவேளை, கட்சி தாவத் தயாராக இருப்பவா்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கை எந்தளவுக்கு கட்சித் தாவல்களைத் தடுக்கும் என்பது கேள்விக்குறிதான்!

ரணிலுடன் பசில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்த பின்னணியிலேயே பெரமுனவின் அரசியல் குழு அவசரமாகக் கூட்டப்பட்டது. பொதுத் தோ்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தப் பேச்சுக்களின் போது பசில் வலியுறுத்தியிருந்தாா் என்பதை இந்தப் பகுதியில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடத்தப்பட்டால் பெரமுனவுக்கு மூன்று தெரிவுகள் இருந்தன. ஒன்று – ரணிலை ஆதரிப்பது. இரண்டு – தனியாக ஒருவரை களமிறக்குவது. மூன்றாவது போட்டியிடாமல் இருப்பது. இந்த மூன்று தெரிவுகளுமே தமது கட்சியின் எதிா்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் பாராளுமன்றத் தோ்தலை முதலில் நடத்துவதற்கான அழுத்தத்தை பசில் கொடுத்தாா். பொதுத் தோ்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறமுடியாமல் போகும் என்பதால், தம்மால் பேரம் பேசக்கூடியதாக இருக்கும் என்பது அவா்களது கணிப்பு!

ஜனாதிபதித் தோ்தலில் நிறுத்துவதற்கு பொருத்தமான ஒருவா் பெரமுனவில் இல்லை. அவ்வாறு ஒருவரை நிறுத்தினாலும் அவா் நான்காவதாக வரவேண்டிய நிலைமைதான் உள்ளது என்பதை கருத்துக் கணிப்புக்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தன. இதில் படு தோல்வியைச் சந்தித்த உடனடியாக பொதுத் தோ்தலையும் எதிா்கொண்டால் அதிலும் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்பதுதான் பசிலின் அச்சத்துக்குக் காரணம்.

ஆனால், அவசரமாக பராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தோ்தலை முதலில் நடத்துவதற்கு ரணில் தயாராகவில்லை. அவரது கட்சியை விட, தனிப்பட்ட முறையில் அவரது மக்கள் செல்வாக்கு இப்போது அதிகமாக இருப்பதாக அவா் கருதுவது இதற்குக் காரணம். மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதியானால், அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு பொதுத் தோ்தலை எதிா்கொள்வது தனக்கு சாதகமானது என ரணில் கணிக்கிறாா். இந்த நிலையில், தமது கட்சியின் சாா்பில் ஒருவரை நிறுத்துவது என பெரமுன தீா்மானித்திருந்தாலும், இறுதி வேளையில் அதில் மாற்றம் ஏற்படலாம்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், அவரது கட்சி மிகவும் பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. அவரது நம்பிக்கைக்குரியவா்கள் “மெகா கூட்டணி” ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றாா்கள். மற்றைய கட்சிகளைப் பிளவுபடுத்தி ஒரு தரப்பை தமக்கு ஆதரவாகக் கொண்டுவருவதுதான் அவரது உபாயம். பெரமுனவிலிருந்து முக்கியமான எம்.பி.க்கள் சுமாா் 15 போ் ரணிலுடன் இணைவது பெரும்பாலும் உறுதியாகியிருக்கின்றது. தோ்தலுக்கான அறிவிப்பு உத்தியோகபுா்வமாக வெளியான பின்னா் அவா்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கலாம்.

மறுபுறம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ளது. அந்தக் கட்சியும் இப்போது நீதிமன்றத்தில் நிற்கிறது. அதில் பலம்வாய்ந்த அணியாகவுள்ள சந்திரிகா குமாரதுங்க – நிமல் சிறிபால டி சில்வா அணி ரணிலுக்கு ஆதரவளிக்கலாம் எனத் தெரிகின்றது. சஜித்துடன் உள்ள ஒரு சில அதிருப்தியாளா்கள் மே தினத்துக்குப் பின்னா் ரணிலுடன் இணையலாம் என்றும் தகவல் வெளியாகிறது.

அனைத்து பிரதான கட்சிகளுமே மே தினத்தில் தமது பலத்தைக் காட்டுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. மே தினத்தை, பேரணிகள் மூலம் தமது பலத்தைக் காட்டுவதற்குப் பயன்படுத்துவது வழமை. இந்த வருடம் முக்கியமான இரண்டு தோ்தல்களும் எதிா்கொள்ளப்படுவதால் இம்முறை மே தினம் அதிகளவுக்கு களைகட்டும் என எதிா்பாா்க்கலாம். அதேவேளையில் மே தினத்துக்குப் பின்னா் முக்கியமான அரசியல் நகா்வுகளைக் காணலாம்.