முல்லைத்தீவில் 75 வீதமான நிலம் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது – ரவிகரன் தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் வன இலாகாவினால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் விவசாய நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ள வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், மேலும் காணிகளை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதே தவிர ஏற்கனவே கையப்படுத்தப்பட்ட பொதுமக்களின் விவசாய நிலங்களை விடுவிப்பதற்கான எந்தவொரு சமிக்ஞையினையும் காண முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 2009ம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 6 ஏக்கர் நிலம் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2009ம் ஆண்டுக்கு பின்னர் 1 லட்சத்து 67 ஆயிரத்து 484 ஏக்கர் காணி வனஇலாகாவினால் கையகப்படுத்தப்பட்டது.பின்னர் 2022ம் ஆண்டில் 42 ஆயிரத்து 631 ஏக்கர் காணியை கையப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 74.24 வீதமான நிரப்பரப்பு வன இலாகாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் காணிகளில் ஒரு துண்டு காணியேனும் விடுவிக்கப்படவில்லை. இந்த காணிகள் யாவும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களாகும். இது ஒரு புறமிருக்க வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் நீர்நிலைகளும் அதுசார்ந்த இடங்களுமாக 61 ஆயிரத்து 401 ஏக்கர் நிலம் உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 321 ஏக்கர் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுபோக படையினர், தொல் லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை உள்ளிட்டவையும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன. மிகுதி நிலத்தில் பொது இடங்கள், தவிர்ந்து மிகக் குறுகியளவு நிலப்பரபினையே எமது மக்கள் தமது குடியிருப்பு, விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்றவற்றுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எனவே இது குறித்து பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். ஜனாதிபதித் தேர்தலும் நெருங்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டு மக்களின் வாழும் உரிமையை இல்லாதொழிக்க அரச திணைக்களங்களாலும், இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் கவனம்
செலுத்தவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.