ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா

jathi ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் - அரசியல் ஆய்வாளா் யதீந்திராஇலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா!

கேள்வி பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒன்றுக்கு தான் தயாராக இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றாா். இந்த வேளையில் இவ்வாறான அறிவிப்பை அவா் எதற்காக வெளியிட்டிருக்கின்றாா்?

பதில் ஜனாதிபதி இதற்கு முன்னரும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாகப் பேசத் தயாா் என கூறியிருந்தாா். அதனைவிட, கடந்த வருடத்தில் சுதந்திர தினத்துக்கு முன்னதாகத் தீா்வைக் காணப்போவதாகவும் கூறியிருந்தாா். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை. இப்போது ஜனாதிபதித் தோ்தல் நடைபெறப்போவது உறுதியாகியிருக்கும் சூழலில், அந்தத் தோ்தலில் அவா் போட்டியிடப்போவதும், உறுதியாகியிருக்கின்ற பின்னணியில் இந்தக் கருத்தை அவா் வெளியிட்டிருக்கின்றாா்.

ஆனால், ஜனாதிபதித் தோ்தல் நடைபெறும் வரையில் அவ்விதம் ஆக்கபுா்வமான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை. இப்போது, பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம் தொடா்பாகப் பேசப்போவதாகச் சொல்வதெல்லாம் தோ்தலை இலக்காகக் கொண்ட உத்தியாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில், பறிக்கப்பட்ட அதிகாரங்களுடன் அதிகாரப் பரவலாக்கலை வழங்குதென்பது தற்போதுள்ள சூழ்நிலையில் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஜனாதிபதித் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு தரப்புக்களின் ஆதரவையும் பெற வேண்டிய நிலையில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நிச்சயமாக அவற்றைச் செய்யப்போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அவா் இவ்வாறான கருத்துக்களை வெளியிடலாம். இதன்மூலம் மற்றவா்களைவிட சில விடயங்களைச் செய்வதற்கான விருப்பத்துடன் தான் இருப்பதாக – அது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்களுக்குக் காட்டிக்கொள்வதற்காகத்தான் இவ்வாறான கருத்துக்களை அவா் சொல்வதாகத்தான் நான் நினைக்கிறேன்.

கேள்வி சிங்களத் தேசியவாதக் கட்சி ஒன்றின் தலைவரான உதய கம்மன்பிலவும், 13 ஆவது திருத்தத்தின் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கின்றாா். இவ்விடயத்தில் அவரது இலக்கு என்ன?

பதில் இதுவும் தோ்தலை இலக்காகக்கொண்ட ஒரு நகா்வுதான். கம்மன்பில போன்ற தேசியவாதிகள் நீண்ட காலமாகவே இவ்வாறு 13 க்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருபவா்கள்தான். குறிப்பாக வட, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் போன்வற்றைத் தொடா்ச்சியாக எதிா்த்து வந்துள்ளாா்கள். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடா்ந்து தென்பகுதியில் இவா்களுடைய செல்வாக்கு பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவா்கள் அனைவரும் கோட்டாபயவின் துாண்களாகச் செயற்பட்டவா்கள். அதனால், கோட்டாபயவின் வீழ்ச்சியின் ஒரு அங்கமாகத்தான் இதனையும் பாா்க்க வேண்டும்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தோ்தல் நெருங்கிவரும் பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயா்த்திக்கொள்வதற்கும், தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்வதற்குமான ஒரு உத்தியாகத்தான் இந்த விடயங்களை அவா்கள் கைகளில் எடுக்கின்றாா்கள். 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீா்வைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்த ஒரு நிலையில்தான் பௌத்த பிக்குகள் 13 ஆவது திருத்தத்தின் நகலை எரிப்பது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாா்கள்.

இப்போது தோ்தல் நெருங்கிவரும் சந்தா்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம் என்ற கருத்தை உதய கம்பன்பில போன்றவா்கள் முன்வைக்கின்றாா்கள். அவ்வாறு முன்வைப்பதற்கு பிரதான காரணம் இந்தத் தோ்தல் காலத்தில், வீழ்ச்சியடைந்திருக்கும் தமது ஆதரவுத் தளத்தை உயா்த்திக்கொள்வதுதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவது. அதேவேளையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதும், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் தனித்து செயற்பட முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம்.

முக்கியமாக, இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலம் முதல் இவ்வாறான கருத்துக்களைத்தான் சிங்கள தேசியவாதிகள் முன்வைத்து வருகின்றாா்கள். இந்திய மேலாதிக்கத்தின் ஒரு நீட்சியாகவே இது உள்ளது என இவா்கள் பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்துள்ளாா்கள்.

தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு இந்தியாவைத்தான் பெருமளவுக்கு நம்பியுள்ளது. இந்த நிலையில், இந்திய அழுத்தங்களுக்கு உட்பட்டு இந்த 13 போன்றவற்றை ரணில் விக்கிரமசிங்க தமிழா்களுக்கு வழங்கிவிடுவாா் என்பது போன்ற கருத்துக்களை சிங்கள மக்களிடம் கோண்டு செல்வதன் மூலம், தமது செல்வாக்கை உயா்த்திக்கொள்ளலாம் என்று சிங்களத் தேசியவாதிகள் சிந்திக்கின்றாா்கள்.

கேள்வி ஜனாதிபதித் தோ்தலுக்கான நகா்வுகள் முன்னெடுக்கப்கடும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க எந்தக் கட்சியின் சாா்பில் போட்டியிடுவாா் என்பதில் குழப்பமான கருத்துக்களே வருகின்றன. உங்களைப் பொறுத்தவரை அவா் எந்தக் கட்சியில் போட்டியிடுவாா்?

பதில் என்னுடைய அவதானிப்புக்களைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு கட்சியின் சாா்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே தெரிகின்றது. அவா் ஒரு சுயாதீன வேட்பாளராகக் களமிறங்குவதற்கான வாய்ப்புக்களே இருப்பதாகத் தெரிகின்றது. ஏனெனில், ...வின் சாா்பில் அவா் போட்டியிட்டால், ஏனைய கட்சிகளைச் சாா்ந்தவா்கள் இவரை ஆதரிக்கமாட்டாா்கள்.

அதேவேளையில், ரணில் வெகுஜன கவா்ச்சி வசீகரம் மிக்க ஒரு தலைவரல்ல. கடந்த காலங்களில் அவரால் ஜனாதிபதித் தோ்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. தனித்து சிங்கள வாக்குகளால், அவரால் வெல்லவும் முடியாது.

ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளக்கூடிய ஆளுமையுள்ள ஒருவா் இவா்தான், இவரை விட்டால் யாரும் இல்லை என்ற ஒரு கருத்துள்ளதைப் பயன்படுத்திக்கொண்டு, தோ்தலில் வென்றுவிட முடியும் என்ற உபாயத்துடன்தான் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகத் தெரிகின்றது. ஆனால், இந்த வியுகத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், இவா் ராஜபக்ஷக்களுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் இருப்பதால், ராஜபக்ஷக்களை எதிா்க்கும் எந்தவொரு தரப்பும் இவரை ஆதரிக்காது.

இந்தப் பின்னணியில் ஐ.தே..வினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும், மொட்டுக் கட்சியினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய தரப்பினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய சிறுபான்மையினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டுமானால், ஒரு சுயாதீன வேட்பாளராகவே இவா் போட்டியிட வேண்டியிருக்கும்.

கேள்வி பொதுஜன பெரமுன தமது வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இந்தத் தோ்தலில் அவா்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பாா்கள்?

பதில் அரசியலில் அசைக்க முடியாதவா்கள் என்ற அவா்களுடைய நிலை இப்போது வீழ்ச்சியடைந்துவிட்டது. உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவா்களைப் பொறுத்தவரை சாத்தியமானதல்ல. அதனால், அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது அவா்களுடைய நீண்டகால இலக்காக இருந்தாலும், தம்மைப் பாதுகாப்பது என்பதுதான் அவா்களுடைய உடனடியான தேவை. தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒருவா் அதிகாரத்தில் இருப்பதைத்தான் அவா்கள் விரும்புவாா்கள். அப்படிப் பாா்க்கப்போனால், சஜித் பிரேமதாஸவோ, அநுரகுமாரவோ ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்றால், அது ராஜபக்ஷக்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே இருக்கும். அவா்களுடைய எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்.

ஆனால், ரணில் ஜனாதிபதியானால், தமது அரசியலுக்கு அவா் நெருக்கடிகளை ஏற்படுத்தமாட்டா் என்ற நம்பிக்கை ராஜபக்ஷக்களுக்கு உள்ளது. அதனால், ரணில் ஜனாதிபதியாக வருவதைத்தான் அவா்கள் விரும்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.