யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் 50பேரை விசாரணைக்கு அழைத்த பொலிசார்

யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான “வடக்கின் போர்“ எனப்படும் துடுப்பந்தாட்டப் போட்டி நடைபெறவிருக்கும் சமயத்தில், அந்த போட்டியை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், பாடசாலைக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் இசைக் கருவிகள், வாத்தியங்களை இசைத்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இச்செயற்பாடு வீதிகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் சிலர் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு பிற்பகல் 6மணிக்குள் விசாரணைகள் முடிக்கப்படும் என அறியப்படுகின்றது.

இந்த நிகழ்வு வருடாந்தம் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். வீதிகளில் இறங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் சகோதர பெண்கள் பாடசாலை முன்றலில் கோஷங்களை எழுப்பியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்நிகழ்வுகள் எப்போதுமே நடைபெறும் செயற்பாடாகவே உள்ளது.

வருடா வருடம் இந்த நிகழ்வுகள் பற்றி பாடசாலை அதிபருக்கு அறிவித்த போதும், அவர்களால் எந்தவித இறுக்கமான நடவடிக்கைகளும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.