‘மத்திய அரசின் சூழ்ச்சி காரணமாகவே யாழ். மாநகரில் தங்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவிருந்த சுயேட்சை குழுவொன்று தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24 ) வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்தி அவர்கள் இதனைத் தெரிவித்தனர். ‘யாழ். மாநகர சபைக்கான தங்களின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடர்பான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது’. ‘ஆனால், தங்களது தரப்பு சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘அதன்படி, யாழ். மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது’.
‘இந்த விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 அரசியல் கட்சிகளினதும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனு நாடளாவிய ரீதியாக எந்தவொரு மாவட்டத்திலும் நிராகரிக்கப்படவில்லை.
இதன் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.



