யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண் உட்பட ஐவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கோப்பாய் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம், நகை, சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கோப்பாய் பொரிஸாருடன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய வாள், கோடரி திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள், 2 சைக்கிள்கள், 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய இளவாலை, மல்லாகம் ,உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.