‘யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை’-எம்.கே.சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகி, புல்டோட்டை சென்று அங்கிருந்து முல்லைத்தீவை நோக்கி பயணிக்கின்றது. 

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு  உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மதத் தலைவர்கள், வடக்கு- கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனைர்.

இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள்  எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில  வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துகொண்டிருந்தபோதே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து நானும், திருமதி அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை பெரும்பான்மையினர் தாக்கினர்.

இவ்வாறு தாக்குதலை நடத்தியவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் இருந்த வேளையில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம் என்றதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த பயணத்தை தொடர்வோம். மேலும் இத்தகைய தாக்குதலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

இந்த பேரணியை நடத்துவதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை முறியடித்து பொலிகண்டி வரை நிச்சயம் முன்னேறி செல்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.