சீனாவில் தயாரிக்கப்பட்ட தொடரூந்துகளை இயக்கமாட்டோம் – இலங்கை தொடரூந்து சாரதிகள் தெரிவிப்பு

சீனாவில் தயாரிக்கப்பட்ட தொடரூந்துகளை இயக்குவதை புறக்கணிக்க இலங்கை தொடரூந்து சாரதிகள்(train drivers) முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் சீனா வலுவாக காலூன்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. சீனாவின் இந்த முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இலங்கை தொடரூந்து சாரதிகளின் முடிவு அமைந்துள்ளது.

இலங்கையின் தொடரூந்து  என்ஜின்   சாரதிகள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட(Sri Lankan Locomotive Engine Operators’ Union (LEOU) Secretary Indika Dodangoda) சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் ,

“சீனாவில் தயாரிக்கப்பட்ட தொடரூந்துகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன தொடரூந்து  பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறாக உள்ளன மேலும்  சீனாவில் தயாரிக்கப்பட்ட தொடரூந்துகள்  உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக பராமரிக்கப்படவேண்டும்.

சீனாவில் தயாரிக்கப்படும் தொடரூந்துகள்  குறித்து எழுப்பப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் சாரதிகள் அந்த தொடரூந்துகளை இயக்குவதை புறக்கணிப்பார்கள்” என்றார்.

சீன  தொடரூந்துகளில் உள்ள கோளாறுகள் காரணமாக சமீபத்திய காலங்களில் கிட்டத்தட்ட 200 விபத்துக்கள் பதிவாகி உள்ளதாக என்ஜின் சாரதிகள் சங்கம் முறையிட்டுள்ளது.

அதே நேரம் ‘மேக் இன் இந்தியா’ (‘Make in India’)திட்டத்தின்கீழ் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  தொடரூந்துகளும்இலங்கையில் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.