மைத்திரியை உடனடியாக கைது செய்யுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மைத்திரியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது நிலைப்பாட்டை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல தடவை நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் குற்றவாளிகளை சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவி புரிந்துள்ளார்.

இது தேசத்துரோக குற்றமாகும். அவரை குற்றவியல் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, கத்தோலிக்க சபை என்பன மைத்திரிபாலவை கைது செய்து விசாரணை செய்யுமாறு CID யிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.