மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இது வரையில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகளை அழிக்கும் செயற்பாடுகளை அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் மேற்கொண்டுவருவதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீண்டகாலமாக தமிழர்களின் கால்நடைகளை வளர்க்கும் மேய்ச்சல் தரை காணியை அபகரித்து பெரும்பான்மையினத்தவர்கள் சேனைபயிர்ச் செய்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல தரப்பாலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எதுவித சாதகமான நிலைமையும் ஏற்படாத நிலையில் கால்நடை பண்ணையார்கள் மேய்ச்சல் தரையில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீனித்தம்பி தியாகராஜா “இது வரையில் 58மாடுகளுக்கு மேல் உயிரிழந்துள்ளது. 32மாடுகள் மின்சார வேலிகளில் சிக்கியும்  26மாடுகள் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகியும்  இறந்துள்ளது. மாடுகளுக்கு சரியான உணவுகள் கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கணக்கான மாடுகள்  உயிரிழக்கும் நிலையில் உள்ளது” கூறியுள்ளார்.

இந்நிலையில்,சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தமது பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டதாக கூறி 17வழக்குகளை கரடியனாறு பொலிஸ் மூலமாக ஏறாவூர் நீதின்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.