முஸ்லிம்கள் பெரும்பான்மை அல்லாத நாட்டில் ஹலால் சட்டமா? – திலங்க சுமதிபால

சமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலுள்ள அரச தரநிர்ண நிறுவனத்துக்கு ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹலால் விநியோகத்துக்கு  சட்டமொன்றை உருவாக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகில்  முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலாவது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அரச மயப்படுத்தப்பட்டுள்ளதா? என கேட்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அடிப்படைவாத கருத்துக்களையும் பிரேரணைகளையும் கொண்டு வந்து அவற்றை, அரசியல் ரீதியில் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். அரசியலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக இவற்றை நிறைவேற்றிக் கொடுத்தால், தேவையற்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் தோன்றும்.

இந்த நாட்டில் சஹ்ரான் அடிக்கும் வரை புர்காவைத் தடை செய்ய காத்திருக்க வேண்டிய ஒரு நிலைமை காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால இதனை தலையிட்டு சட்டமியற்றினார். அவருக்கு அதற்கான புன்னியம் கிடைக்கட்டும்.

இந்த நடவடிக்கையைப் போன்ற ஒன்றைத் தான் ஹலால் ஊடாக செய்யப் போகின்றார். இதற்கு எதிராக பாரிய ஆர்பாட்டங்கள் வெடித்து, மக்கள் கோபமடைந்து, பின்னர் இந்த ஹலால் முத்திரையுள்ள எந்தவொரு பொருளையும் வாக்கக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிடும். இதனையடுத்து மக்கள் பதற்றமடைய ஆரம்பிக்கும்.

இதனால், தயவு செய்து இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியில் இடமளித்து, தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார்.