முள்ளிவாய்க்கால் நினைவாஞ்சலி: பொலிஸ் நடவடிக்கைக்கு சிறீகாந்தா கண்டனம்

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி தொடர்பில் பொலிஸார் நடந்து கொண்ட முறைமை சம்பந்தமாக விசனம் தெரிவித்துத் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியவை வருமாறு:

“நேற்றைய தினம் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை சமூக இடைவெளியைக் கடைப் பிடித்ததபடி மிகச் சிறிய எண்ணிக்கையில் நடத்தியவர்கள் தொடர்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வேடிக்கையானது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அவை முழுக்க முழுக்க சட்டவிரோதமானவை என்பதோடு அப்பட்டமான அடிப்படை உரிமை மீறலாகவும் அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பற்றிக் கவலைப்படாமல் கணிசமான எண்ணிக்கையில் நெருக்கமாக பொதுமக்கள் காணப்படும் காட்சிகளைத் தொலைக்காட்சிகளின் செய்திச் சேவைகளில் அடிக்கடி காணமுடிகிறது. இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பதிலுமே பொலிஸாரின் கவனமும் தலையீடும் கடடயமாகத் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தி கூறவேண்டிஉள்ளது” என்றார்.