முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்

இத்தனை குழப்பம் நடந்தாலும் வீரபாகு தேவருக்கான பூசைக்கு தடங்கல் ஏற்படவில்லை. நேரமோ 11 மணி இருக்கும். ஆற்றில் மீண்டும் டோர்ச் அடிப்பது தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் யானை முன்னேறி, ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மேடான இடத்தில் நின்று நாம் இருந்த திசையை பார்த்துக் கொண்டிருந்தது.

அனைவருக்கும் பயம் பிடித்து விட்டது. இந்த யானை எந்தப் பக்கத்தால் வந்து கரையேறும் என கணிக்க முடியவில்லை. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவே குறைந்தது 6 மணி நேரம் எடுக்கும். மீண்டும் ஒருவர் “டோர்ச் அடிக்காதீர்கள்” என சிங்களத்தில் பலமாக எச்சரித்துக் கொண்டு செல்கிறார்.

வீரபாகு தேவருக்கு முன்னால் நின்று பாடிக்கொண்டிருந்த பூசாரி, அங்கே அருகில் இருந்தவர்களை ஒரு கையில் பிடித்து அவர்களுக்கு தெய்வ வாக்கு சொல்லிக்கொண்டு, மறு கையில் தீப்பந்தம் ஒன்றினால் உடம்பில் பிடிப்பதும், பின்னர் அதை அவரது தலையில் வைப்பதும், பின்னர் மற்றக்கையில் பிடித்திருக்கும் பக்தர்களுக்கு தீயினால் ஆசிர்வதிப்பதும் போன்ற வித்தியாசமான செயல்களை செய்து கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு யோசனை யானை வந்து விடுமோ! இல்லை இந்த பூசாரி பக்தர்கள் தலையில் தீ வைத்து விடுவாரோ!!! என்றவாறே இருந்தது.

யானை மெதுவாக வேறு திசைக்கு நடந்து செல்வது தெரிகிறது. பின்னர் திடீரென காணாமல் போய் விட்டது. வேகமாக நடந்து தூர சென்றிருக்கும் என நாம் அனைவரும் கதைத்துக்கொண்டே பின்னால் திரும்பி பார்க்கும் போது, அந்த யானை எம் பின்னால் நின்று கொண்டிருந்தது.

அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் என வார்த்தையால் விபரிக்க இயலாது. அதனது கண்கள் மட்டும் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு கலந்தது போல தெரிந்தது. மற்றும்படி ஒரு உயரமான கறுப்பு உருவம் தான். அனைவருக்கும் பயத்தின் உச்சக்கட்டம்.

அனைவரும் நித்திரையில் இருந்து எழுந்து விட்டார்கள். டிராக்டர் சாரதிகள் நாம் கொண்டுவந்த பழங்களை எடுத்து யானைக்கு கொடுக்கிறார்கள். சாப்பிட்டுக்கொண்டு இன்னும் வேண்டும் என கேட்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தது. 15 நிமிடங்களுக்கும் மேலாக சாப்பிடுவதும், இன்னும் வேணும் என்று கேட்பதுவுமாக நேரம் போக போக இனி கொடுத்து கட்டாது விரட்டி விடுவதை தவிர வேறு வழி இல்லை என கூறி, வாகனங்கள் அனைத்தும் தமது எஞ்சின்களை இயக்கி சத்தத்தினை உண்டாக்கி கடைசியில் யானையை பத்தினி அம்மன் கோவிலுக்கு பின்னால் உள்ள காட்டிற்குள் விரட்டி விட்டார்கள்.

மீண்டும் டிராக்டர் சாரதிகள் காவலுக்கு இருக்க, மற்றவர்கள் அனைவரும் நித்திரைக்கு சென்று விட்டோம். அதிகாலை 1.30 மணி அளவில் தான் வீரபாகு தேவருக்கு பூசை முடிந்ததாக அறியக்கி டைத்தது. அவ்வளவு நேரமும் அந்த பூசரியார் வாக்கு சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.

பின்னர் காலை 3 மணிக்கு முன்னேஸ்வரம் சண்முகநாதன் ஐயா வந்து “எழும்புங்க சாமி” என்று அனைவரையும் தட்டி எழுப்பிக்கொண்டு வருகிறார். அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் நித்திரைக்குச் சென்றோம். “இவர் என்ன இப்படி இவ்வளவு நேரத்தோடு வந்து எழுப்புகிறார்” அப்படி இப்படி என்று கத்திக்கொண்டு அனைவரும் ஒரு மாதிரியாக எழும்பி விட்டனர்.

எழும்பி பார்க்கும் போது தான் தெரிந்தது, எமது குழு மட்டும் தான் கடைசியாக எழும்பியவர்கள் என்று. மற்றைய அனைவரும் குளித்துவிட்டு பொங்கல் வைக்க தயாராகி விட்டனர்.

thumbnail Kabilaththa 1 முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்

அவசர அவசரமாக குமுக்கன் ஆற்றில் குளித்துவிட்டு, நாமும் பொங்கல் வைக்கத் தயார் ஆனோம். பொங்கல் வைக்கும் பொறுப்பை மட்டக்களப்பு ரஞ்சித் அண்ணா, கிறிசான், விக்னேஷ் மற்றும் கொழும்பிலிருந்து வந்த நண்பர் ஒருவருமாக எடுத்து செய்து முடித்தனர்.

மற்றையவர்கள் பிரசாதத்திற்கு அவல் தயாரிப்பதிலும், அபிஷேகத்துக்கு தேவையான பழங்களை வெட்டுவதிலும் கவனமாக இருந்தனர். காலை 6 மணி ஆகும் போது அனைத்து வேலைகளும் முடிந்தது.

ஆற்றை கடந்து சென்று புனித வனத்தில் நாம் பிரசாதம் வைத்து முதல் நாள் வணங்கிய இடத்தின் நடுவே இருந்த கல்லாலான முருகன் சிலையை ஆற்றங்கரை ஓரம் வைத்து அபிசேகம் பண்ணிய பின்னர் மீண்டும் சிலை இருந்த இடத்துக்கே கொண்டு வந்து வைத்துவிட்டு வணங்கினோம். வணங்கும் போது காலையில் செய்த பிரசாதமான அவலையும், பொங்கலையும், பழங்களையும் படைத்தோம்.

பின்னர் அவசரப்படாமல் மீண்டும் அந்த புனிதமான புளியமரத்தை நோக்கிய பயணம் தொடர்ந்தது.

thumbnail Kabilaththa 3 1 முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்

நேற்று அந்த இடத்தில் அந்த நேரத்தில் நமது குழுவினர் மட்டுமே இருந்தனர். ஆனால் இன்று அங்கு வந்திருந்த அனைவரும் புளியமரத்தை சூழ அமர்ந்திருந்தனர்.

அந்த இடத்தில் ஒலி எழுப்பக் கூடாது என்றமையால் அனைவரும் அமைதியாக கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் பிரசாதங்கள் படைப்பதற்கோ மாலைகள் இடுவதற்கோ அனுமதியில்லை.

ஏதேனும் உணவுப் பொருட்களின் வாசனை வெளிவந்தால், யானைகள் இங்கே வந்து தங்கி விடும் என காவலுக்கு நின்ற அதிகாரிகள் கூறினார்கள்.

பத்து நிமிடத்துக்கு மேலாக அவ்விடத்தில் இருந்து விட்டு மீண்டும் குமுக்கன் ஆற்றை நோக்கி நடக்கலானோம்.

வரும் வழியில் சிலைகள் அதிகமாக இருந்த இடத்தில் ஒரு பெண் யானை ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தது. தனது தலையிலும் உடம்பிலும் கீழே இருந்த மண்ணை வாரிப் போட்டுக் கொண்டே மக்கள் இருந்த பகுதி நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அந்த யானையை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிற்குமாறு யானைக்கு கட்டளையிட்டு பக்தர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தனர்.

அப்போது நேற்றிரவு நாம் நித்திரை செய்யும்போது அந்த யானையும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது தெரிய வந்தது. இரண்டு யானைகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டன. நாம் கையில் வைத்திருந்த அவலை ஒரு பக்கமாக வைத்து விட்டு விலகி வந்து நின்றோம். அவை அவல் இருக்கும் இடத்தை சுலபமாக கண்டுபிடித்து இரண்டும் ஒன்றாக சேர்ந்து அந்த அவலை பகிர்ந்து உண்ண ஆரம்பித்தன.

இரு யானைகளுக்கும் உணவளித்த மகிழ்ச்சியில் கொண்டு சென்ற பாத்திரங்களையும் தூக்கிக் கொண்டு மீண்டும் டிராக்டர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

மீண்டும் வீடு நோக்கிப் புறப்பட அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. போகும்போது குடிக்க நீர் இல்லை என்பதனால் ஆற்றிலிருந்து பூவல் மூலம் இருக்கின்ற போத்தல்களில் எல்லாம் நீர் நிரப்பி எடுத்துக்கொண்டு டிராக்டர் சாரதி வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.

நேரமோ பத்து முப்பது ஆகிவிட்டது, எங்கே இவர்களைக் காணவில்லை எனப் பார்க்கும்போது வீரபாகு தேவருக்கு முன்னால் நின்று வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். வணங்குகிறார்கள் என்று சொல்வதை விட மண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பயணம் எவ்வளவு கஷ்டமானது என்பது நமக்குத் தெரியும். அத்தனை கஷ்டங்களிலிருந்தும் பாதுகாத்து அனைவரையும் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவர்களது வேண்டுதலாக இருந்தது.

அவர்கள் காசுக்காக வாகனம் ஓடுவது போல் தெரியவில்லை. ஒரு தொண்டாகவே இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள்.

‘அரோகரா’ சத்தம் முழங்க இரு டிராக்டர்களும் கொட்டியாகல நோக்கி நிதானமாக புறப்பட்டன.

– மட்டுநகர் திவா-

முற்றும்.