முன்னறிவித்தல் இன்றி சிறிலங்கா வந்த சீன வெளியுறவு அமைச்சர்

எவ்வித முன்னறிவித்தலுமின்றி நேற்று இலங்கைக்கு திடீரென வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுர திறப்பு விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் வருகை தரவில்லை. தாமரைக் கோபுர நிதியில் ரூபா 2 பில்லியன் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை அடுத்து, இந்த விடயம் சர்ச்சைக்குரியதாக மாறயுள்ளதால், இந்தப் பயணத்தை சீன வெளியுறவு அமைச்சர் இரத்துச் செய்திருந்தார்.

தாமரைக் கோபுரம் எக்ஸிம் வங்கியிடமிருந்து 104 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சரின் விஜயம் பற்றி உள்ளுர் ஊடகங்களுக்கு எந்தவித தகவல்களும் வழங்கவில்லை.

காலை 10 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்தார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை மாலை 5 மணிக்கு சந்தித்தார். 6.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

மதியம் 2.45 மணிக்கு கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தைப் பார்வையிட்டார். 3.45 மணிக்கு கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட்டார். ஆனால் அவர் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு செல்லவில்லை.

சீன நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தாமரை கோபுரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.  ஒரு போலி சீன நிறுவனம் தாமரை கோபுரத்தைக் கட்டுவதாக உறுதியளித்து அப்போதைய அரசாங்கத்திடமிருந்து 2பில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும், பின்னர் அது காணாமல் போனதாகவும், இப்போதுகூட அந்த நிறுவனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஆனால் இது தொடர்பாக சீன தூதரகம் எந்தவித பதிலையும் வழங்கவில்லை. ஊடகத்தினரின் கேள்விகளுக்குக்கூட பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சருடனான மைத்திரிபால சிறிசேனவின் சந்திப்பில் இந்த விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.