‘முத்துக்குமாருடைய உயிர்த்தியாகத்தின் நோக்கம் நிறைவேறாதது ஏன்?’ – தோழர் பாஸ்கர்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதினொரு ஆண்டுகள் கழிந்து பனிரெண்டாவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு கொந்தளிப்பு அப்போது நிறைவேறினாலும், அவரது நீண்டகால நோக்கம் நிறைவேறவே இல்லை.

அவ்வாறு நிறைவேறாது என்பதற்கான தடயங்கள் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ஒட்டியே நன்கு தெரிந்து விட்டது.  இன்றுவரையிலும் அவ்வாறே. முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தினால் முக்கியமான இரு சாதகங்கள் மட்டும் ஏற்பட்டன.

முதலாவது

தமிழகத்தில் ஈழச் சிக்கல் மேலும் முன்னெப்போதும் விட பரவலான கவனத்தைப் பெற்றது.

இரண்டாவது

எண்ணற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் அரசியல் அரங்கிற்கு வந்தனர்.

ஆனால் இவ்வாறு வந்தோரில் ஏகப்பெரும்பான்மையினரை  திடப்படுத்தாமல் இருக்கவே செய்தன முதன்மையான ஈழ ஆதரவு அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகமானது ஈழ ஆதரவு அமைப்புகள் புதியவை தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. இத்தகைய புதிய அமைப்புகள் ஈழச் சிக்கலுக்காகவே முதன்மையாகச் செயற்படுவதற்கு தோன்றின.

ஆனால் இவை முள்ளிவாய்க்காலின் முதன்மையான போர் குற்றவாளியான இந்திய விரிவாதிக்க அரசை அவ்வாறு அம்பலப்படுத்துவதற்கு தயாராய் இல்லாத அரசியல் கண்ணோட்டத்தில் இருக்கின்றன. இப்பொழுதோ இலங்கையில் இந்திய விரிவாதிக்க அரசின் கூட்டோடு முள்ளிவாய்க்காலை அரங்கேற்றிய கும்பலே மீண்டும் அங்கு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் ஆதரவோடு. ஈழச் சிக்கலுக்கான முதன்மையான பழைய மற்றும் புதிய அமைப்புகள் இதை தடுப்பதற்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

அதற்கு இரு காரணங்கள் மட்டும் இருக்கக்கூடும்.

முதலாவது காரணம் என்னவெனில்

இத்தகைய ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள் தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு முகங்கொடுப்பதிலேயே சிக்கியிருக்கக்கூடும்.

இரண்டாவது காரணம் என்னவெனில்

முள்ளிவாய்க்கால் போர் குற்றச் செயல் கும்பலான இராஜபக்ச கும்பலானது  இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் சீன சாய்வு ஆட்சியை நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராய் இந்தியா தலையிடும் எனும் அனுமானம் ஆகும். எவ்வாறாயினும் இந்த அனுமானம் தவறே. இந்தியா தலையிட்டாலும் ஈழம் கிடைக்காது. இந்தியாதான் முதன்மைப் போர் குற்றவாளியாக இருக்கும் நிலையில் அதை எதிரியாய் வரையறுக்காத/அம்பலப்படுத்தாத நிலையில் ஈழம் அறவே கிடைக்காது. இதை இன்னமும் அங்கீகரிக்கத் தயாராய் இல்லை ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய கொந்தளிப்பு வழங்கிய வாய்ப்பிலும் அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதே நிலைமைதான்.  இந்நிலையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய உணர்வை தட்டியெழுப்பினால்தான் அத்தியாகத்தின் நோக்கத்தை நோக்கி நகருவதற்கு முடியும். அதற்கு யார் உண்மையான எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள் என்பதை சரியாய் வரையறுப்பதும் அவசியம். “யார் உண்மையான தமிழ் தேசியவாதிகள்/எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள்…..”

ஈழ ஆதரவு அமைப்புகள் இடையே  இந்த விஷயத்தில் தெளிவு இல்லை. அதனால் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது.