முக்கிய தலைவர்களுடன் அடுத்தடுத்து தமிழக ஆளுநர்  சந்திப்பு –பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமா?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனைக்காலம் முடிந்த பிறகும் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டில் குரல்கள் வலுத்து வருகின்றன.

அத்தோடு ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அமைச்சரை மாநில ஆளுநருக்கு முறைப்படி கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்த பிறகும், அதன் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்துள்ளார்.

இந்த பின்னணியில் பல்வேறு அரசியல் விவகாரங்களும் தனிப்பட்ட காரணங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு அண்மையில் விசாரணை நடத்தியது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராஜ், “ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தின் சதி தொடர்பான விவகாரம், இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் உள்ளது. ராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பான புலனாய்வில் உறுதியான தகவல் சிபிஐக்கு கிடைக்கவில்லை,.” என்று குறிப்பிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், “மிகப்பெரிய இந்த சதி தொடர்பான புலனாய்வு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது. இருந்தபோதும் பிரிட்டன், தாய்லாந்தில் இருந்து தகவல் வரும் என சிபிஐ காத்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட தண்டனை பெற்ற கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரும் மனுக்கள் மீது மாநில ஆளுநர் அரசியலமைப்பின் 161ஆவது விதியின்கீழ் மன்னிப்பு வழங்க உரிமை உள்ள விவகாரத்தில், தனது அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் நீதிமன்ற தலையீடு இல்லாமல் இந்த வழக்கில் ஏன் ஆளுநர் முடிவெடுப்பது பற்றி அவரிடமே கேட்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் கழித்து வரும் பேரறிவாளன், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னை விடுவிக்குமாறு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கருணை மனு மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தை பேரறிவாளன் தரப்பு அணுகியது. இதையடுத்து, அவரது மனு மீது முடிவெடுக்குமாறு ஆளுநரை உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டது.

இதன் பிறகு மீண்டும் இந்த விவகாரம் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம், கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரை விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநருக்கு செய்தது.

மேலும் ராஜிவ் கொலை வழக்கில் ஆளுநர் தாமதம் செய்வது தொடர்பான கருத்துகளை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பதிவு செய்தன. இந்தப் பின்னணியில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.