மீண்டும் தமிழ் மக்களுக்கு நினைவுபடுத்தப்பட்ட சிறீலங்காவின் மாறாத இனவாதம்

கொரோனா வைரசின் தாக்கம் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை மிகப்பெரும் அனர்த்தத்திற்குள் தள்ளியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன், 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருமளவான மக்கள் வேலைகளை இழந்ததால் உலகம் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் தமது குடிமக்களுக்கு பல சலுகைகளை மேற்கொண்டு வருவதுடன், சில நாடுகள் கைதிகளையும் விடுவித்துள்ளன.

நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், கைதிகளை விடுதலை செய்யுங்கள் என ஐக்கிய நாடுகள் சபையும் கோரிக்கை விடுத்திருந்தது. பல நாடுகள் அதனை கருத்தில் கொண்டு கைதிகளை விடுவித்தும் உள்ளன.

அது மட்டுமல்லாது போர் இடம்பெற்ற பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் குறைந்த வசதிகளுடன் வாழ்வதால் இந்த அனர்த்தம் அவர்களை மேலும் பாதிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

சிறீலங்காவிலும் தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தான் வாழ்கின்றனர்.

பலரின் குடும்ப உறுப்பினர்கள் தற்போதும் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மீது இன்றுவரை குற்றம் எதுவும் சுமத்தப்படவில்லை. அவர்களை நம்பி வாழும் பல தமிழ் குடும்பங்கள் தற்போதைய நிலையில் மிகப்பெரும் துன்பத்தை எதிர்நோக்கலாம்.

எனவே தான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருந்தன. ஆனால் சிறீலங்கா அரசு இந்த மிகப்பெரும் அனர்த்தத்திலும் தனது இனவாதத்தை கைவிடவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் சிந்திக்காத சிறீலங்கா அரசு தமிழ் மக்களை படுகொலை செய்த இராணுவச் சிப்பiயை விடுவித்ததுடன் அண்மையில் சிறையில் இருந்த 2000 இற்கு மேற்பட்ட ஏனைய கைதிகளையும் விடுவித்திருந்தது. ஆனால் அவர்களில் கூட ஒரு தமிழ் கைதியும் இல்லை என்பது தான் இனவாதத்தின் உச்சம்.

அது மட்டுமல்லாது, கோவிட்-19 நடவடிக்கைக் குழுவிற்கு தலைவராக ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க்குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட தனது இராணுவத்தளபதியை நியமித்துள்ள சிறீலங்கா அரசு ஏனைய பொறுப்புக்களிலும் படை அதிகாரிகளை நியமித்து கொரோனா நெருக்கடியிலும் தமிழ் மக்களை மிகுந்த அச்சத்திற்குள் தள்ளியுள்ளது.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக் கூறுபவர்களையும் படையிரை கொண்டு கைது செய்தும், மிரட்டியும் வருகின்றது. அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு போன்றவை தமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.

ஆனாலும், சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் சீனாவும் சிறீலங்காவுக்கு நிதி உதவியையும், ஏனைய உதவிகளையும் வழங்கி வருவது தமிழ் மக்களின் மனங்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அனர்த்த காலத்தின் போது ஒரு நாட்டுக்கு ஏனைய நாடுகள் நிதி வழங்குவது வழமையானதே ஆனால் அந்த நிதி அங்கு வாழும் எல்லா இன மக்களுக்கும் சமமாக சென்றடைவதற்கான ஏது நிலைகளை அந்த நாடு கொண்டுள்ளதா என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கோவிட்-19 தொடர்பாக கொண்டுவரப்படும் அவசரகால சட்டங்களை ஹங்கேரியின் பிரதமர் விக்ரோர் ஒபர்ன் தவறாக பயன்படுத்தி தனக்கு எதிரானவர்களை அடக்கிவருவதாக குற்றம் சுமத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உசுலா வொன் டி லேயன் என்பவருக்கு சிறீலங்காவுக்கு 22 மில்லியன் ஈரோக்களை உதவியாக வழங்கும் போது சிறீலங்காவின்; இனவாதம் கண்ணுக்கு தெரியாமல் போனது தான் ஆச்சரியமானது.

-இலக்கு மின்னிதழ் ஆசிரியர் தலையங்கம்-