மியான்மர் அகதிகளுக்கு உதவ மணிப்பூர் அரசு முடிவு

மியான்மரில் இருந்து வரும் அகதிகளுக்கு உணவு, தங்குமிடம் வழங்கத் தடை விதிக்கும் உத்தரவை, ஐநா அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

“கடிதத்தின் உள்ளடக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, வேறு விதமாக விளக்கப்பட்டுள்ளன என தோன்றுகிறது. இந்தத் தவறான புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு, மேலே குறிப்பிட்ட 26.03.2021 திகதியிட்ட கடிதத்தை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.” என்று மாநில அரசின் சிறப்பு உள்துறைச் செயலர் எச்.ஞானபிரகாஷ்  கூறியுள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மியான்மருக்கான தூதர், அங்கு ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி காரணமாக, அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குமாறு இந்தியா உள்ளிட்ட மியான்மரின் எல்லைபுற நாடுகளின் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.