மியான்மரில் இராணுத்துக்கு எதிராக போராட்டம் – சிலர் கைது

மண்டலே நகரத்தில், மியான்மர் பல்கலைக்கழகத்தின் முன் இராணுவத்தை எதிர்த்து ஒரு சிறு போராட்டம் நடைபெற்றது. அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மியான்மர் இராணுவத்திற்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றாலும், யங்கூனில் பாத்திர பண்டங்களை அடித்து ஒலி எழுப்பி, இராணுவத்துக்கு எதிரான  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அதே போல் மருத்துவமனைகளில் போராட்டங்கள் நடந்துள்ளன. பல மருத்துவர்கள் தங்கள் பணியைச் செய்யாமல் நிறுத்தினர், மேலும் பலர்  தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் சில இலச்சிணைகளை அணிந்து கொண்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மர் சாலைகளில் பெரும்பாலும் அமைதி நிலவுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பெரிய அளவில் போராட்டங்களுக்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராணுவ ஆட்சியை ஆதரிக்கும் விதத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்த பேரணி நேபிடவ் நகரத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை முதல் ஆங் சாங் சூச்சி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த ஓராண்டுக்கு இராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, இராணுவம்   இந் நடவடிக்கையினை செய்துள்ளது.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐ.நா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாக சீனா உள்ளது.