மாவட்ட நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்படுகிறோம்-பிரதேசசபை தவிசாளர்கள்

கொரனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பிரதேச சபையின் தவிசாளர்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை.பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளரைக்கொண்டு தீர்மானங்களை எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளருமான என்.புஸ்பலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கொரனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலப்பகுதியில் பிரதேசசபைகளினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுககு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

பிரதேசசபை தவிசாளர்களின் அதிகாரம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் முறையான அதிகாரிகள் என்பது அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள் என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரனா வைரஸ் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பங்குகொள்வதற்காக அழைக்கப்படவில்லையென்பதுடன் பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உட்பட்ட அரச அதிகாரிகளைக்கொண்டு மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபையின் தவிசாளர்கள் ஒன்றியம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது மக்களுக்காக இருபத்திநான்கு மணி நேரமும் களத்தில்நின்று ஒவ்வொரு பிரச்சினைக்கும் முகம்கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரவு பகல் பாராது செயற்பட்டுவரும் மாவட்ட பிரதேசசபை தவிசாளர்களாகிய நாங்கள் மக்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுப்பதில் எவ்வித பங்களிப்பினையும் செய்யாத இக்கட்டான நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தினால் முன்னெடுத்துசெல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

பிரதேச செயலகங்கள் ஊடாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடி எடுக்கப்படும் தீர்மானங்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் பிரதேசபையின் செயலாளர்களுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றபோது அவற்றினை செயற்படுத்துகின்ற விதத்தில் மக்கள் நலன் கருதுகின்றவர்கள் என்ற வகையில் பொறுiமையுடன் அந்த தீர்மானங்களை செயற்படுத்திவந்தோம். ஆனால் தொடர்ந்து தவிசாளர்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் மாவட்ட செயலக தீர்மானங்களை செயல்படுத்துவதில் நாங்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றோம். மக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்கமுடியாதநிலையேற்படுகின்றது.

இந்த அடிப்படையில் அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் தனிப்படுத்தல் ஓழுங்குவிதிகள் ஒழுங்குபடுத்தல் முறையான அதிகாரி என்ற வகையில் பிரதேசசபையின் தவிசாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் ஊடாகவே தனிமைப்படுத்தல்ääநிவாரணம் வழங்கல்,தொற்று நீக்கல் உட்பட சகல விடயங்களும் கையாளப்படவேண்டும் என தவிசாளர்கள் ஒன்றியம் தீர்மானம் எடுக்கின்றது.

மற்றும் அனைத்து அரசுசார்,அரசசார்பற்ற நிவாரணங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகின்றபோது அதில் ஏற்படும் சரிபிழைகள்,பொருத்தப்பாடு அற்ற செயற்பாடுகள்,எமது தவிசாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு அந்த தவறுகள் நிவர்த்திக்கப்படவேண்டுமாகவிருந்தால் பிரதேச செயலாளர்கள் பிரதேசசபை தவிசாளர்களுடன் கலந்துரையாடவேண்டும்.

எமது பகுதிகளில் உள்ளுர் உற்பத்திகள் போதியளவு உள்ளபோதிலும் வெளியிடங்களில் இருந்து மரக்கறி மற்றும் அதனோடினைந்த பொருட்களை கொண்டுவருவதன் மூலம் எமது உள்ளுர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் திண்டாடுகின்றனர்.இந்த நிலையினை நீக்குவதற்கு எமது மாவட்ட உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்து மாவட்டத்திற்குள்ளும் வெளியிலும் விநியோகம் செய்ய மாவட்ட செயலகம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பலர் தொழில்வாய்ப்புகளுக்காக மாவட்டத்திற்கு வெளியே சென்றவர்கள் உணவுமின்றி மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.அவர்களை இங்கு கொண்டுவந்து அந்ததந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல்களை மேற்கொண்டு அவர்களை குடும்பத்துடன் இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.