மஹிந்தவை பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற விமலின் கருத்தால் கூட்டணிக்குள் குழப்பம்

 

“பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற கூறியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ச அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவர் வெளியிட்டகருத்தினை மீளப்பெற்றுக்கொள்ளவும் வேண்டும். எமது கட்சியில் தலைமைத்துவம் மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்தை கூறுவதற்கு அவருக்கு எந்தவித தகுதியும் கிடையாது.”

இவ்வாறு காட்டமாகக் கூறியிருக்கின்றார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நேற்று கொழும்பு நெலும்மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் இது குறித்த சாகர காரியவசம் கடும் தொனியில் கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“எமது கட்சியானது ஒழுக்கம் சார்ந்த திறம்பட செயற்படுகின்ற கட்சியாகும். ஒழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்குவதே இந்த கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ ஆகியோர் எமக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்பது ஒரு விசேட காலகட்டத்தில் உருவாகியது. பிழையான சந்தர்ப்பத்தில் தோல்வியடையச் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சுற்றிலும் மக்கள் அணிதிரண்டு மக்கள் சக்தி உருவாகி பின்னர் கட்சியாக உருவெடுத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அமர்ந்து வருகையில் அவரை முதன்நிலைப்படுத்தியே எமது கட்சியும் இயங்கிவந்தது. இந்த கட்சியின் இருதயமாகவும் அவர் திகழ்கின்றார்.

எனினும் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள கருத்துக்கமைய கட்சி என்கிற வகையில் அதற்கு பதிலளிக்க கடமைபட்டுள்ளோம். லங்காதீப பத்திரிகையில் அவர் தெரிவித்திருக்கின்ற விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து நீக்கி தலைமைத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். அமைச்சர் விமல் குறித்து நடவடிக்கை எடுக்க எமது கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் எமது கட்சியும் கிடையாது இருப்பினும் அரசியல் இலாபத்திற்காக இவ்வாறான கீழ்த்தர நடவடிக்கையை எடுக்கவும் எமது கட்சி முனையாது. பொதுஜன முன்னணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே அறிவித்தார். எனினும் எமக்கு குறுக்குவழி அரசியல் தெரியாது. நாட்டின் எதிர்காலத்திற்காக சேவை செய்கின்ற கட்சி இது. இன்றும் மஹிந்த ராஜபக்சவே கட்சியின் தலைமைத்துவத்தை வகிக்கின்றார்.

இதுகுறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய கருத்திற்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதோடு வெளியிட்டகருத்தினை மீளப்பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.எமது கட்சியில் தலைமைத்துவம் மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்தை கூறுவதற்கு அவருக்கு எந்தவித தகுதியும் கிடையாது. கூட்டணியில் இருக்கின்ற மற்றும் அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர் ஒருவரது இந்த கருத்து மிகவும் கீழ்த்தரமானதாகும். அதுகுறித்து நாங்கள் கவலையடைகிறோம்.

2015இல் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததன் பின்னர் தங்கல்ல வீட்டிற்கு சென்றபோது மஹிந்த சூறாவளியல்ல, மஹிந்தவின் மிகப்பெரிய சூறாவளியே ஏற்பட்டது. கொழும்பிலிருந்து கதிர்காமம் சென்ற மக்களுக்கு தங்காலையை கடந்து செல்லமுடியாத வகையில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. அதற்கு பலரும் பிறப்புச் சான்றிதழ் அளிக்க முயற்சித்தாலும் அது மஹிந்த சக்தியாகவேதான் உள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு எவரும் இருக்கவில்லை. அவருக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்தது தாமே என்று தனிநபர் ஒருவர் கூறினால் அவரது தலையில் ஏதோ ஒரு வித்தியாசம் நிகழ்ந்துவிட்டதாகவே மக்கள் நினைப்பார்கள். வெட்கம், அச்சம் என்பது இருந்தால் அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்பு கேட்பார்.”