இலங்கை நாடாளுமன்றில் இம்ரான் கான் விசேட உரை – ஜனாதிபதி, பிரதமருடனும் பேசுவார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தலை வர்கள்கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயத்தை உறுதிப்படுத்திக் கூறினார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 22ஆம் திகதி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து, இரு தரப்புப் பேச்சுகளை நடத்தவுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள், நாட்டுக்கு வருகைதரும் முதலாவது வெளிநாட்டு அரச தலைவராக இம்ரான் கான் வரலாற்றில் இடம்பிடிக்கின்றார்.

இலங்கை, பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வரும் அதேவேளை, இந்திய – பாகிஸ்தான் அமைதியின்மை குறித்து, கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து இலங்கை விலகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.