மஹர கைதிகள் போராட்டம் நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் இடைக்கால அறிக்கை – சஜித்

மஹர சிறைச்சாலையில் கைதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் நியாயப்படுத்தக்கூடியது எனச் சிறைச்சாலை கலவரம் குறித்து வெளியாகியுள்ள இடைக்கால விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிறைச்சாலையில் உள்வாங்கப்படக்கூடிய கைதிகளை விட மூன்று மடங்கு அதிகமானவர்கள் அங்கு காணப்பட்டனர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தங்களைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறும், தரமான உணவுகளை வழங்குமாறும் கைதிகள் வேண்டுகோள் விடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் காணப்பட்ட நெரிசல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆர்ப்பாட்டம் நியாயப்படுத்தக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறையில் மனித உரிமை மீறப்பட்டது என இடைக்கால விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்” என்றார்.