மறக்கப்படும் புற்று நோயாளரும் மாற்று வழிகளும் – வடக்கு கிழக்கு புற்றுநோய் சங்கம் (CANE)

புற்றுநோயானது, உலகில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கான காரணிகளில் 2ஆம் இடத்தை வகிக்கும் அதே நேரம், இலங்கையில் வைத்தியசாலைகளில் இடம்பெறம் இறப்புக்கான காரணிகளிலும் 2ஆம் இடத்தை வகிக்கின்றது. உலகளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டு 9.6 மில்லியன் இறப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு 20,246 ஆகவும்  2014இல் 23,105 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வட மாகாணத்தில் 2010ஆம் ஆண்டு 445 ஆக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு 513 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் 2010ஆம் ஆண்டு 745 ஆக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

விழிப்புணர்வில் வினைத்திறன் வேண்டும்

வடகிழக்கில் புற்றுநோய் அதிகரிப்பிற்கும், அதனை தடுப்பதற்கும் தடையாக நவீனத்துவமான ஆடம்பர   வாழ்க்கைமுறை, இலாப நோக்கம் கொண்ட உணவு உற்பத்திகள், அதிகரிக்கும் மது மற்றும் புகையிலை பொருட்களின் பாவனை சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் என்பன அடிப்படைக் காரணமாக அமைகின்றன. வடகிழக்கில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பல்வேறு விதத்தில் மக்களை சென்றடைந்தாலும், முக்கியமாக கிராமம் மற்றும் பின்தங்கிய இடங்களில் உள்ள மக்களை சென்றடையாததாலும்,  விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்களை தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்ய முடியாததன் காரணமாகவும் விழிப்புணர்வின் நன்மையை ஏற்படுத்த முடியவில்லை.  இதற்கு முக்கிய காரணமாக சுகாதார துறையில் உள்ள திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல் சமூக மட்ட விழிப்புணர்வு குறைவு என்பவற்றை குறிப்பிடலாம்.

சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ள அசேதன உணவுகள், சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட உணவுகள் இலகுவாக நுகரக்கூடிய முறையில் அனுமதிக்கப்பட்டமையினாலும்   மக்களின் நேர மட்டுப்பாடால் கூடிய நேரத்தினை பொருட்கள் கொள்வனவு செய்வதில் செலவழிக்க முடியாததாலும் புற்றுநோய் தாக்கமானது அதிகரிக்கின்றது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  .

தற்போது வடகிழக்கு மாகாணங்களில் உள்ள இளம் சமுதாயத்தினரது மது, புகைத்தல், போதைப்பொருள் பாவனை போன்ற பழக்கம் அவர்களின் வேலையின்மை, வேலையின்மையால் உருவாகும் அதிகரித்த ஓய்வு, அதிகரித்த பணப்புழக்கம், பெற்றோரின் கவனக்குறைபாடுகள் போன்றவற்றால் அதிகரிக்கின்றது. இச் செயற்பாடு மூலமும் புற்றுநோய்த் தாக்கமானது அதிகரிக்கின்றது.

அதிகரித்த தொழில்நுட்ப வசதி காரணமாக உடற்செயற்பாடுகள் குறைந்து இயந்திர பாவனை அதிகரிப்பு மற்றும்  கொழுப்பு, துரித உணவுகள் இனிப்பு, குளிர்பானங்கள் என்பவற்றின் பாவனை அதிகரிப்பின் மூலம் ஏற்படும் உடற்பருமன் அதிகரிப்பு புற்றுநோய்க்கான மற்றுமொரு காரணியாக அதிகரிக்கின்றது.

போதிய சுகாதார மேற்பார்வையின்மையின் காரணமாக சுய பாதுகாப்பு அற்ற முறையில் ஊழியர்கள் புற்றுநோய் தாக்கத்துக்கு இலகுவாக உட்படுகின்றனர். உதாரணமாக வீதிகளில் வேலை செய்வோர், சுத்திகரிப்பு தொழிலாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், கிருமிநாசினி விசிறுவோர் என்போர் முகக்கவசம் மற்றும் ஏனைய உரிய பாதுகாப்பு அங்கிகள் இன்றி வேலை செய்ய அனுமதித்தல் என்பனவும் காரணங்களாக அறியப்பட்டுள்ளன.

சிகிச்சை வசதிகளும் இடைவெளிகளும் 

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை (Thellippalai Cancer Hospital)  புற்றுநோயாளர்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலையாக வட மாகாணத்தில் உள்ளது. போக்குவரத்து வசதி, பணவிரயம் என்பவற்றின் காரணமாக ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களும் இவ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தருவதில் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். இவ் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கான போதிய சிகிச்சை வசதிகள் உருவாக்கி கொண்டிருந்தாலும் மத்திய மாகாண நிர்வாகங்களுக்கு இடையில் காணப்படும் அதிகார போட்டியின் காரணமாகவும் உரிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாமையாலும் வைத்திசாலையை மேலும் மேம்படுத்த முடியாதுள்ளது. புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் உலகெங்கும் அறிமுகப் படுத்தப்பட்ட போதும் இலங்கை போன்ற இலவச மருத்துவ சேவை வழங்கும் வளர்முக நாடுகளில் அவை முழுமையாக கிடைப்பதில்லை.  அதேவேளை தனியார் நிலையங்களூடாக பெறக்கூடிய சில சிகிச்சைக்கான மருந்துகளின் அதிகரித்த விலை பல வறிய நோயாளர்கள் சிகிச்சையை தொடர முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

இறுதி பராமரிப்பு வசதிகளும் இடைவெளிகளும்

வடகிழக்கு மாகாணங்களில் போரின் காரணமாக ஏற்பட்ட புலம்பெயர்வு, இழப்புக்கள் என்பன இங்கு வாழும் மக்களிடம் குடும்ப ஆதரவின்மை, தனிமை என்பவற்றை உருவாக்கியுள்ளது. இக் குடும்ப சூழலில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கைத்தரம் முழுமையாக பராமரிப்பு இன்றி பாதிக்கப்படுவதுடன் இறுதி பராமரிப்பு கேள்விக்குறியாகின்றது. இந் நிலைமையை குறைப்பதற்காக புற்றுநோய் காப்பகங்களான CANE காப்பகம் வடக்கிலும், EASCCA காப்பகம் 2019 இல் கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டன. கேன் (CANE) நிறுவனம் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு சேவைகளை ஆரம்பித்ததோடு 2009ஆம் ஆண்டில் இருந்து கேன் தொண்டு நிறுவனமானது எல்லா மாகாணங்களையும் உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கான இலவச சேவைகளை வழங்கி வருகின்றது.

கேனின் சேவைகள்

  • இலவச தங்குமிட சேவை வழங்குதல்.
  • இலவச ஆரோக்கியமான உணவு வழங்கல்
  • இலவச மருத்துவ சேவைகளை வழங்குதல்.
  • இலவச போக்குவரத்து சேவைகளை வழங்குதல்.
  • நோயாளர்களுக்கான தரமான சேவையை பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த சேவையாளர்களைக் கொண்டு வழங்குதல்.
  • புற்றுநோய் சம்பந்தமான பரிசோதனை செய்வதற்கு வசதியற்று வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு வைத்திய நிபுணரின் சிபார்சின் அடிப்படையில் பரிசோதனை செலவுகளை பொறுப்பெடுத்தல்.

கேன் நிறுவனத்தின் வேறு சேவைகள்.

  • தாதியர் மற்றும் பராமரிப்பு கற்கைநெறியை தொடர இருக்கும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கல்
  • கேன் நிறுவனமானது வீடுகளில் தங்கியிருக்கும் புற்றுநோயாளர்களிடம் விஐயம் செய்து அவர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவையை வழங்குதல்.
  • புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகளை இலவசமாக நடாத்துதல்.

இக் காப்பகத்தின் மூலம் எதிர்காலத்தின் திட்டமிடப்பட்டுள்ள சேவைகள்

1.வாய், மார்பு, கருப்பை புற்றுநோய்களுக்கான ஆரம்ப பரிசோதனையை தொடங்குதல்.

2.இறுதிப் பராமரிப்பிற்குரிய காப்பகமாக முழுமையாக மாற்றுதல்.

இக் காப்பகத்தின் சேவையை மேம்படுத்தி புற்றுநோயளர்களின் வாழ்க்ககைத் தரத்தை மேலும் உயர்த்துவதற்கும் புற்றுநோயைத் தடுப்பதற்கும் மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமாக உள்ளது.

எனவே மறக்கப்பட்டு வரும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கும், சிகிச்சைக்கும் இறுதிக்கால பராமரிப்பிற்கும் எம்மாலான உதவிகளை வழங்கி புற்றுநோயாளர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம். எமது உறவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அவர்கள் அனுபவித்த துன்பங்களை இன்னுமொருவர் அனுபவிக்க கூடாது என ஒவ்வொருவரும் எண்ணுவோம் அதற்காக பாடுபடும் நிறுவனங்களூடே உதவிக்கரம் நீட்டுவோம்.

உதவி வழங்க விரும்புவோர் வடக்கு கிழக்கு புற்றுநோய் சங்கத்தினரை கீழ்வரும் முகவரிகளில் அல்லது தொலைபேசி இலக்கத்தினூடு தொடர்பு கொள்ளலாம்.

இலக்கம்-05, சபாபதிப்பிள்ளை றோட்,
உடுவில், சுன்னாகம் யாழ்ப்பாணம்.
[email protected]