மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை – பலவந்தமாக பணம்பறிக்கும் படையினர்

சிறிலங்கா சிங்கப் படைப்பிரிவின் இராணுவத்தினர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 14 நிர்வாகப் பகுதிகளிலும் அதிஸ்டலாபச் சீட்டு விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பொது மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

படுவான்கரைப் பகுதியில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வீதியால் செல்லும் மக்களை வழிமறித்து ரூபா 100 பெறுமதியான அதிஸ்டலாபச் சீட்டை கட்டாயமாக வாங்கும்படி கோருவதுடன், வாங்க மறுப்பவர்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க வைப்பதாகவும் அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் கிடைக்கும் நிதி, போரில் காயமுற்று, ஊனமடைந்துள்ள இராணுவத்தினரின் தேவைக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு  உதவுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.  இந்த விற்பனையில் தரவை பகுதி இராணுவத்தினரே கூடிய கவனம் எடுப்பதாக அறியப்படுகின்றது.

மட்டக்களப்பு படுவான்கரைப்பகுதி போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். படுகொலைகள்,நிலப்பறிப்பு,சொத்தழிவு என சொல்லொணா துன்பங்களை அனுபவித்து இன்று வறுமையின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் இந்த மக்களிடம் சிங்கள படையினர் இவ்வாறு பணம் பறிப்பது மிகவும் கீழ்த்தரமானது.