மதுரை அருகே ராஜராஜசோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பமும், ராஜராஜசோழன் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையிலான மாணவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்விலேயே மேற்கண்ட பொருட்கள் கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே காரைக்கேணி தேவட்டி முனியாண்டி கோயில் அருகே செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழைமையான சத்திரம், கிணறு அகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது சுவரில் உள்ள கற்களில் பழைமையான தமிழ் மற்றுமு் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றில் முதலாம் ராஜாஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுக்கள் எனத் தெரியவந்தது.

மேலும் அங்கிருந்து 500 மீற்றர் தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வுக் குழுவினர் வழங்கிய தகவல்களின்படி சிறுசிறு துண்டுகளாக சேதமடைந்த நிலையிலிருந்த கல்வெட்டுக்களில் உள்ள சொற்களைக் கொண்டு, அவை கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு என்பதை அறியக் கூடியதாக உள்ளதாகவும், சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்துத் துண்டுக் கல்வெட்டுகள் இருந்தன என்றும், ராஜராஜசோழனின் 13ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இதன் காலம் கி.பி.998 என்றும் அறிவித்துள்ளனர்.

மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு அழிந்ததை அறிய முடிகின்றது. இப்பகுதியில் சிதறிக் கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப் பள்ளிகள் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனவும் கருதலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.