மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில்  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

image2 மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

மண்டைதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காணி உரிமையாளர்களும் பொது மக்களும்  அங்கு திரண்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக  மக்களோடு இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர்.

image0 3 மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

ஆனால்  மக்கள் கடுமையான எதிர்பை வெளியிட்டதோடு,வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  இதையடுத்து காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.

மேலும் வேலனை பிரதேச செயலர்சோதிநாதன் இது குறித்து கூறுகையில்,  “இங்குள்ளவர்களின் எதிர்ப்பு காரணமாக காணி அளவிடுவதை நிறுத்தப்படுகின்றது. காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாது” என்றார்.