இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும், தமிழ்த்தரப்பும் – பி.மாணிக்கவாசகம்

இராணுவ உளவியல் நிர்வாக வழிப்போக்கும், இனங்களைப் பிரித்தாளும் ஆட்சி முறையிலான ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் சிறுபான்மை தேசிய இன மக்களை மட்டுமல்லாமல் பெரும்பான்மை இன மக்களையும் பதம் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.

சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள போதிலும், சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசு தவறியிருப்பதாகவே தென்பகுதியில் உணரப்படுகின்றது.

குறிப்பாக கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களுக்கு எரியூட்டும் விவகாரத்திற்கு முடிவு காணாமல் இழுத்தடிக்கின்ற அரசாங்கத்தின் போக்கு குறித்து பெரும்பான்மை இன மக்களின் சில தரப்புக்களில் அதிருப்தி உணர்வு தலைதூக்கியுள்ளது.

முஸ்லிம்களை மத ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்ற அரசாங்கத்தின் இனவாதப் போக்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் விவகாரத்தின் மூலம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக மத ரீதியிலான குரோதத்தை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டிருந்த ராஜபக்சாக்களின் மதவாதப் போக்கு, இந்த விவகாரத்தின் மூலம் ‘எல்லையைக் கடந்து விட்டது’ என்ற ரீதியிலான சிந்தனைப் போக்கு தென்னிலங்கையில் துளிர்விடத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா, புதைப்பதா என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து தேசிய அளவிலான ஓர் எரியும் பிரச்சினையாகத் தலைதூக்கி உள்ளது. அந்த உடல்களை எரிக்கக் கூடாது அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். ஆனால் இந்த விடயத்தை மத உணர்வு ரீதியில் அல்லாமல் அறிவியல்பூர்வமாக அணுகி, பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக அரசாங்கம் போக்கு காட்டி இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பே என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புத்திஜீவிகளும் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளவர்களும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த உணர்வு அரசாங்கத்தின் மீதான அதிருப்தியாகப் பரிணமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளான பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டு மக்களை – குறிப்பாக சிங்கள பௌத்த மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னுரிமை அடிப்படையில் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற தேவையை ராஜபக்சாக்கள் தமது தேர்தல் பிரசாரங்களின்போது முதன்மைப்படுத்தி இருந்தனர்.

ஆனால் ராஜபக்சாக்களின் அரசு ஒரு வருட காலத்தைக் கடந்துவிட்ட போதிலும், உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் முறையாகத் தண்டிக்கப்படவில்லை என்பதை சனநாயகம் மற்றும் நல்லாட்சியின் மீது பற்றுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு என்பது உண்மையான தேசப் பாதுகாப்பையும்விட தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இன மக்களை பெரும்பான்மை இன மக்களுடன் ஐக்கியமாக வாழ்கின்ற நிலையில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதிலேயே தங்கியிருப்பதாகக் கருதி இந்த அரசு அதில் கருத்தூன்றிச் செயற்படுகின்றது என்ற உணர்வு அவர்களிடம் தலைதூக்கி இருக்கின்றது.

நாட்டின் பல்லின மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கி தேசத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முற்படவில்லை என்ற குறைபாட்டை அவர்கள் சுட்டிக்காட்ட முனைந்துள்ளார்கள். இனங்களைப் பிரித்தாள்வதன் ஊடாகத் தமது குடும்ப ஆட்சியை மன்னாராட்சி முறைக்கு ஒப்பான வகையில் வளர்த்துக் கொள்வதற்கும் நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்வதற்குமே ராஜபக்சாக்கள் முயன்றிருக்கின்றார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள் என்ற சிந்தனையும் தென்பகுதியில் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் தென்னிலங்கையில் விடுதலை இயக்கம் (லிபரேஷன் புரொன்ட்) என்ற அமைப்பு தோற்றம் பெற்றிருக்கின்றது. அந்த அமைப்பு இலங்கை குடிமக்களுக்கு என விளித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் ‘பிரித்தாளும் முயற்சிகளை ஏற்படுத்தி எம்மைப் பின்னோக்கி இழுக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைமையை முறியடிப்பதற்கு அனைத்து சமூகங்களையும் இன, மத வேறுபாடுகளைத் தாண்டிச் செயற்பட’ முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது.

‘பிரித்தாளும் தந்திரோபாய ஆட்சி முறைமை காரணமாக சுதந்திரத்தின் பின்னர் இன மற்றும் மத குழுக்கள் தங்களுக்கிடையில் பகைமையைப் பாராட்டி வந்துள்ளன. இதன் விளைவாகப் பெரும்பான்மை சிங்கள சமூகம் சிறுபான்மை சமூகங்களுடன் இணைவது தடுக்கப்படுவதுடன் அரசாங்கத்தின் பொறுப்பு கூறும் நிலையில் இருந்தும் தடுத்துள்ளது’ என்று விடுதலை இயக்கம் என்ற அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவாதக சூளுரைத்து, இனவாத பிரசாரத்தின் வழியே ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்சாக்களின் அரசாங்கம் தோல்வியடைந்து செல்வதாகவே கருதப்படுகின்றது. இதற்கு அதன் இனவாதப் போக்கும் இனங்களை அதனூடாகப் பிரித்தாள்கின்ற ஆட்சி முறைமையே முக்கிய காரணம் என தென்னிலங்கையில் இருந்கு குரல் எழுந்துள்ளது.

இனவாதமே இந்த அரசாங்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என அரசியலில் மாற்றங்களுக்காகக் குரல் கொடுத்துள்ள தென்னிலங்கையின் விடுதலை இயக்கம் அந்தத் தோல்வியை மக்களிடம் இருந்து மறைப்பதற்காக இனவாதத்தையே அரசு கருவியாகப் பயன்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து, ‘முறைவழியான இனவாத மற்றும் ஒடுக்குமுறை’யின் வெளிப்பாடாக அதனை அந்த அமைப்பு அடையாளப்படுத்தி இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பது தொடர்பிலான திறனற்ற செயலாண்மையினால் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ள சூழலில் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்ய்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நிகழ்வு அங்கேறியிருக்கின்றது. இது நாட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து, அவர்களைப் பாதுகாக்கத் தவறுகின்ற அரசாங்கத்தின் தெரிவிற்குரிய – கவனத்தைச் சிதறடிப்பதற்கான இனவாத நடவடிக்கையாக அந்த விடுதலை இயக்கம் இனம் கண்டிருக்கின்றது.

நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வேலைத் தளங்களில் இருந்து வருகை தந்து இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காகவே தேர்தலில்  வாக்களித்திருந்தார்கள்.  கொரோனா தொற்றபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் உணவுக்கு வழியின்றி இருக்க இடமின்றி பாலியல் தொழிலை நாடவேண்டிய அவல நிலைக்கு ஆளாகி, நாடு திரும்புவதற்குத் தனியார்களான கொடையாளிகளை நாடவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ள போதிலும், இது விடயத்தில் அரசு பாராமுகமான போக்கையே கொண்டிருக்கின்றது.

இதேபோன்று கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள உல்லாசப் பயணத்துறை சார்ந்த சாரதிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கான நிவாரண உதவிகளில் அக்கறையற்றிருக்கின்ற அரசு உல்லாசப் பயணத்துறையில் பொருளீட்டுவதற்காக கொரோனா பேராபத்து மிக்க உக்ரைன் நாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையை அரசாங்கம் உற்சாகப்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றது.

3 Ukraine Tourists Arrived in Sri Lanka Tested Positive for COVID19 1 இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும், தமிழ்த்தரப்பும் -	பி.மாணிக்கவாசகம்

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களின் வருகையினால் உருவாகிய ஆடைத்தொழிற்சாலைகளின்  கொரோனா தொற்று கொத்தணியினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொழிலை இழந்து பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கான நிவாரண உதவிகளில் அரசு அக்கறையற்றிருக்கின்றது. மொத்தத்தில் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயனுறுதிமிக்க நலன்புரி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறியிருக்கின்றது. அவர்களின் சமூகப் பாதுகாப்பும் கைவிடப்பட்டிருக்கின்றது.

இந்த வரிசையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களைப் பிடிவாதமாக எரிப்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதனால் முஸ்லிம்கள் கலாசார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த வரிசையிலேயே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டதை அரசாங்கத்தின் மோசமான இனவாதச் செயலாக தென்னிலங்கையின் விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கின்றது.

அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரினால் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அதே இடத்தில் மீளவும் கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இந்த நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் கல்வி அமைச்சு ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டதாக (அழுத்தம் கொடுக்கப்பட்டதாக) வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்குக் கருத்துரைத்தபோது தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சற்குணராஜா, தான் நிர்வாகப் பொறுப்புக்களை நிறைவேற்றுகின்ற ஒரு சிவிலியன் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ன கூறுகின்றதோ அதனை அப்படியே செயற்படுத்துவதே தனது கடமையும் பொறுப்பும் என்பதை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தி உள்ளார். அரச மேலிடத்து உத்தரவானாலும் நீதி நியாய நிலைமைகளையும், சமூக உணர்வுகளையும் கருத்திற்கொண்டு தற்துணிவுடன் செயற்பட வேண்டிய பொறுப்பும் பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனத் தலைவருக்கு இருக்கின்றது என்பதை அவர் கவனத்திற் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.

இத்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று அரச தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது என்ற தோற்றப்பாட்டில் அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது முழுமையாக நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே.

மீளவும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற நினைவுத்தூபியின் கட்டிட நிர்மாண வேலைகளுக்கான எழுத்து மூல அதிகாரம் கொண்ட அனுமதி அரசாங்கத்திடம் இருந்து இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. வெறும் வாய்மொழி ஊடான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே காரியங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட அராஜக செயற்பாட்டுக்கு எதிராக சர்வதேச மட்டம் அளவில் கிளம்பியுள்ள எதிர்ப்புகளைத் தந்திரோபாய ரீதியில் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகக்கூட அமையலாம்.

138237634 4915003738574147 6821096504959630134 o இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும், தமிழ்த்தரப்பும் -	பி.மாணிக்கவாசகம்

ஜெனிவா அமர்வு நடைபெறவுள்ள மார்ச் மாதம் வரையில் இழுத்தடித்து காலத்தைக் கடத்திவிட்டு, அதற்கு அதன் பின்னர் நினைவுத்தூபி விவகாரத்தைக் கைநழுவவிடவும் கூடும். ராஜபக்ச அரசாங்கம் மட்டுமன்றி, பெருந்தேசியவாதிகளான பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கடந்த காலச் செயற்பாடுகள் இத்தகைய நடவடிக்கைகளையே தமிழ் மக்களுக்குக் கசப்பான பாடமாகப் புகட்டி இருக்கின்றன.

எனினும், யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர் விளைவாக சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் இனவாத போக்கிற்கு எதிராகக் கிளர்ந்துள்ள உணர்வுபூர்வமான நிலைமைகளையும், நாட்டின் தென்பகுதியில் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் சனநாயகத்தின் மீதும் நல்லாட்சி மீதும் பற்றுகொண்டுள்ள செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கிய தென்னிலங்கையின் விடுதலை அமைப்பின் முன்னுதாரணச் செயற்பாட்டையும் தமிழ்த் தரப்பு தனது தேசிய நலன்களுக்காக உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

இந்த நிலைமைகளின் ஊடாக மேலெழுந்துள்ள சக்திகளை இணை சக்திகளாகவும் நட்பு சக்திகளாகவும் கொண்டு தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டிக் கொள்ளவும், அதன் ஊடாக ஓர் அர்த்தமுள்ள அரசியல் தீர்வை நோக்கிய காய்நகர்த்தலை சாமர்த்தியமாக மேற்கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.