மட்டு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் மேலதிக வாக்குகளினால் வெற்றி

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ளது. அதாவது 38உறுப்பினர்கள் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் 20 உறுப்பினர்கள்  ஆதரவாகவும் 18பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

மாநகரசபையின் இந்த விசேட அமர்வில், முதல்வரினால் கடந்த அமர்வில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் பல திருத்தங்களை முன்வைத்ததன் காரணமாக அந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் வரவு செலவு திட்டம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படுவதாகவும் அவற்றிற்கு ஆதரவு வழங்குமாறு  முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

IMG 0339 மட்டு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் மேலதிக வாக்குகளினால் வெற்றி

அதனை தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் ஈபிடிபி கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேட்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களும்  வாக்களித்தனர்.

இன்றைய அமர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம்,இரா.சாணக்கியன் ஆகியோர் பார்வையாளராக கலந்துகொண்டு அவதானித்தமையும் குறிப்பிடத்தக்கது.